உள்கட்சி பூசல் முதல் பாலியல் புகார் வரை சர்ச்சைகளின் நாயகனாக திகழ்ந்த ‘சகலகலா’ டாக்டர் மணிகண்டன்: பெண் டாக்டர்கள், நர்ஸ்களுக்கும் தொல்லை அம்பலம்

மதுரை: நடிகையின் பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்கட்சி பூசல் உட்பட சர்ச்சை பேச்சுகளின் நாயகனாகவும் இருந்து வந்தார். இவரது அரசியல் வாழ்வு அஸ்தமிக்க வாய்ப்புள்ளதால், அதிமுகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் முருகேசன். இவரது மகன் டாக்டர் மணிகண்டன்(45). மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். அண்ணா நகரில் மருத்துவமனை நடத்தி வந்தார். தந்தையை போலவே இவருக்கும் அரசியலில் தீவிர ஆர்வம் ஏற்பட்டது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட பலர் விருப்ப மனு அளித்தனர். டாக்டராக பணியாற்றிக்கொண்டு கட்சி நிகழ்ச்சிகளில் அத்தி பூத்தாற்போல் தலைகாட்டி வந்த மணிகண்டன், சசிகலா ஆசியுடன் சீட் பெற்று ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது அவரது தேர்வுக்கு மூத்த நிர்வாகிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

அமைச்சர் பதவி: தேர்தலில்  வென்ற டாக்டர் மணிகண்டனுக்கு, எதிர்பாராவிதமாக அமைச்சர் பதவி கிடைத்தது. பொறுப்பேற்ற ஒரே வாரத்தில் ‘‘இலவச இணைப்பாக’’ ராமநாதபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவே விரும்பி தனக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் பதவிகள் தந்து அழகு பார்த்தார் என பேசினார். இதனால் மணிகண்டனிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, முனியசாமிக்கு வழங்கப்பட்டது. அன்று முதல் இருவரும் ‘‘எலியும், பூனையுமாக’’ இருந்து வந்தனர். ராமநாதபுரத்தில் நடக்கும் அரசு நிகழ்வில் முனியசாமி பங்கேற்க வந்தால், ‘‘இவர் ஏன் இங்கெல்லாம் வருகிறார்?’’ என தனது ஆதரவாளர்களிடம் வெளிப்படையாகவே கேட்டு வந்தார் மணிகண்டன். 2016 செப்.22ல் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அடுத்த சில வாரங்களில் ராமநாதபுரத்தில் நடந்த கூட்டுறவு வார விழாவில் பேசிய மணிகண்டன், ஜெயலலிதாவின் உடல் நிலை ராஜ ரகசியம் என கூறி சர்ச்சையில் சிக்கினார். இதைதொடர்ந்து 2016ல் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அவரது சகோதரர் சசிகுமாரின் மனைவியும், நகராட்சி முன்னாள் தலைவருமான (பொறுப்பு) கவிதாவிற்கு சீட் ஒதுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கவிதா, அமமுகவில் இணைந்தார்.

வேட்டியை உருவுங்கப்பா...: மணிகண்டனின் அராஜகப்போக்கை பிடிக்காமல், ராமநாதபுரம் மாவட்டத்தில் பலர் அமமுகவுக்கு தாவினர். இதனால் வெறுப்படைந்த அவர் ஒரு பொதுக்கூட்ட மேடையில், ‘‘அதிமுக கரை போட்ட வேட்டிகளை அமமுகவினர் யாராவது கட்டினால் நடு ரோட்டில் உருவுங்கள். போலீஸ் வழக்கு போட்டால் நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்றார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்றொரு மேடையில் அன்றைய அதிமுக எம்பி அன்வர் ராஜா பேசும்போது, ‘‘ராமநாதபுரத்திற்கு பயணிகள் விமான போக்குவரத்து, புதிய ரயில்கள் கொண்டுவர நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன்’’ என்றார்.

இதற்கு மணிகண்டன் மறுப்பு தெரிவித்து, ‘‘அமைச்சரான எனது கோரிக்கையால் தான் பயணிகள் விமான போக்குவரத்து, புதிய ரயில் போக்குவரத்து வரப்போகிறது’’ எனக்கூறி, அன்வர் ராஜாவிற்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தினார். மேடையில் அன்வர் ராஜா, அதிமுகவினர், அதிகாரிகளை ஒருமையில் மிரட்டும் வகையில் பேசுவது என இவர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் கிளம்பிக் கொண்டே இருந்தது. மாவட்ட அதிமுகவினருக்கு ஒதுக்கப்படும் கான்ட்ராக்ட் வேலையை பொதுக்கூட்ட மேடைகளில் பட்டியலிட்டு, யாருக்கெல்லாம் கொடுத்துள்ளேன் எனக்கூறி, அவர்களை மேடையில் எழுந்து நிற்க வைத்து அவமதிப்பு செய்ததாகவும் புகார் உள்ளது. மேலும் மண்டபம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த தங்க மரைக்காயர் 2019, அக்.3ல் மறைவிற்கு பின் காலியாக உள்ள அப்பதவியில் புதியவரை நியமிக்க விடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்த குற்றச்சாட்டும் உள்ளது. மேலும், மாவட்ட உள்ளாட்சி தேர்தலிலும் ‘‘உள்ளடி வேலைகளை’’ பார்த்ததாக புகார் கிளம்பியது. அரசு நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வருவதை வாடிக்கையாக கொண்டிருந்த குறைபாடும் பேசப்படுகிறது.

அமைச்சர் பதவி பறிப்பு : தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இருந்து மணிகண்டன், கலந்து கொள்ளும் விழா மேடைகளில் தன்னை மட்டுமே தம்பட்டம் அடித்து கொள்வார். கடந்த 2019, ஆக.7ல் கேபிள் டிவி தொடர்பாக சக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை பற்றிய அவரது சர்ச்சை பேச்சால், அன்று மாலையே அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. எடப்பாடி ஆட்சியின்போது அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட ஒரே நபர் மணிகண்டன் மட்டுமே. பல்வேறு பகீரத முயற்சி எடுத்தும் இழந்த பதவியை மீண்டும் பெற முடியாமல் போனது. சமீபத்திய சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் தான் குடியிருக்கும் வீட்டருகே கழிவுநீர் ஓடுவதாக கூறி, வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆளுங்கட்சி எம்எல்ஏவே இப்படி போராட்டத்தில் ஈடுபடுகிறாரே என அதிமுகவினர் இவர் மீது தலைமைக்கு தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில்தான் நடிகை சாந்தினி புகாரில் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, கைது நடவடிக்கை, இவரது அரசியல் வாழ்க்கையை மேலும் தலைதூக்க முடியாத அளவிற்கு செய்திருக்கிறது. டாக்டர்கள், நர்சுகளுக்கும் தொல்லை: கடந்த 2016க்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக மணிகண்டன் பணியாற்றி வந்தார். அப்போது அரசு மருத்துவமனையில் உடன் பணியாற்றும் பெண் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பெண் ஊழியர்களில் சிலர், மணிகண்டன் தங்களிடம் தவறாக நடக்க முயன்றதாக அப்போதைய டீன் சிவக்குமாரிடம் புகார் அளித்தனர். மேலும் அப்போது செவிலியர் சங்கத்தினர் டீன் அலுவலக வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவங்களும் நடந்தன. இதில் பல புகார்கள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அமைச்சராக இருந்தபோது ரவுடியை சந்தித்து ஆறுதல்

ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி கொக்கிகுமார் (எ) ராஜ்குமார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 2018ம் ஆண்டு இவர், நண்பர் விக்னேஷ்வரனுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது பிடிக்க முயன்ற எஸ்ஐயை இருவரும் கடுமையாக தாக்கினர். இந்த வழக்கில் கைதாகி இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களை அமைச்சராக இருந்தபோது மணிகண்டன் சந்தித்து நலம் விசாரித்தது கடும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: