குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று 8 மாத குழந்தைக்கு தாயாக மாறிய செவிலியர்

திருமலை: குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் 8 மாத குழந்தையை தாய்போல் கவனித்துக்கொண்ட செவிலியர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநிலம் நிர்மல் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது 2 மாத குழந்தையுடன் வேலைக்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்றனர். அங்குள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்த அவரது கணவர் ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து   அவரது மனைவியின் தாய் வீடான பைன்சாவுக்கு அழைத்து வந்தார்.

அவரது மனைவி மற்றும் அவரது பெற்றோருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனால் தம்பதியினர் இருவரும் நிஜாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும், மனைவியின் பெற்றோர் மேல் சிகிச்சைக்காக பைன்சா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதியின் 8 மாத குழந்தை, தாய்பால் கிடைக்காமல் பசியால் அழுது கொண்டு இருந்தது. இது குறித்து பைன்சா மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் புகியா சுனிதாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே புகியாவுக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதியரின் 8 மாத குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தனர். தனது ஒரு வயது குழந்தையுடன் 10 நாட்கள் தனது தாய் பாலை வழங்கி வந்தார்.

இரவு பணியில் உள்ள சுனிதா மருத்துவமனையில் இருந்து இரண்டு முறை தனது கணவரின் உதவியுடன் வீட்டிற்கு வந்து குழந்தைக்கு தாய்பால் கொடுத்து சென்றார். தற்போது அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் குழந்தையை பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories: