பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திருச்சி: ‘‘பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும். பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படாது’’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி, மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெறும் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்று மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இந்த பரவலை கருத்தில் கொண்டு தான் உரிய முடிவு எடுக்கப்படும். பள்ளி மாணவர்களின் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு மாணவர்களின் உடல் நலமும் முக்கியம். பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும். வகுப்பறைக்கு வந்தே மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். ஆன்லைனில் தேர்வு நடத்தப்படாது. சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படியே தேர்வு தேதி உறுதி செய்யப்படும்.

மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்டேட் போர்டு மாணவர்களை மனதில் வைத்து பேசினோம். தேர்வு தேதியை மாநில அரசு முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். பத்மா சேஷாத்ரி பள்ளி மீதான புகார் நிரூபணமானால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது. அனைத்து பள்ளிகளிலும் விசாகா கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: