அரசியல் செய்ய இது நேரமல்ல...அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும்-அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி

மதுரை : மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில், 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று துவக்கி வைத்து பார்வையிட்டார். கலெக்டர் அனீஷ் சேகர், எம்பி சு.வெங்கடேசன், எம்எல்ஏக்கள் பூமிநாதன், வெங்கடேசன், மாநகராட்சி கமிஷனர் விசாகன், ஊராட்சி சேர்மன் சூரியகலா கலாநிதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து, திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் கொரோனா கவனிப்பு மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது : தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும், தொற்று பரவலை தடுக்க 100 ஊராட்சிகளில் மினிகேர் சென்டர்கள் துவங்கி, தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் 420 ஊராட்சிகளிலும் சிறிய அளவில் 5 அல்லது 10 படுக்கைகள் அமைக்கப்படுகிறது. ஆரம்ப அறிகுறி தெரிந்தாலே தீவிர சிகிச்சை தரப்படும். தமிழகத்தில் எங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. தவறான செய்தி பரப்ப இது நேரமல்ல. 20 நாட்களுக்குள் தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் இருந்தும் கூட உயிரிழப்பை தடுப்பதற்கான ஆக்சிஜன் மற்றும் பொருட்களை வரவழைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ போன்றவர்கள் மனிதாபிமானத்தோடும், மனச்சாட்சியுடனும் நடந்து கொள்ள வேண்டும். அரசியல் செய்வதற்கு இது நேரம் அல்ல. தடுப்பு பணிகள் முடிந்து, மக்களை காப்பாற்றியவுடன் உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் விளக்கம் தரப்படும். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.

கடந்த அதிமுக ஆட்சியில் பெயரளவில்தான் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன. முழுமையாக மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது 20 நாட்களில் கலெக்டர் தலைமையில் செவிலியர்கள், மருத்துவர்கள் எத்தனை பேர் தேவைப்படுவார்கள் என அறிந்து, கிராமப்புறங்களில் உடனடியாக நியமிக்க மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய வரலாற்றில் 20 நாட்களுக்குள் சிறப்பான தமிழக முதல்வரின் ஈடு, இணையற்ற செயல்பாட்டை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்’ என்றார்.

10 ஆக்சிஜன் இயந்திரம் வழங்கல்

கப்பலூரில் நேற்று தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை பார்வையிட்ட அமைச்சர்

மூர்த்தியிடம் கப்பலூர் தொழில் அதிபர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ரகுநாத ராஜா 10 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை வழங்கினார்.

அதிமுக ஆட்சியில் ஒரு வசதியும் செய்யலபேரையூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்த போது அங்கிருந்த பொதுமக்கள், இங்கு போதிய டாக்டர்கள் இல்லாமல் நோயாளிகளை மதுரைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதுவரை இங்கு பிரதே பரிசோதனை மையம் இல்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை தூக்கி கொண்டு திருமங்கலம், உசிலம்பட்டி ஜிஹெச்களுக்கு அலைய வேண்டியுள்ளது.

குடிநீரும் பற்றாக்குறையும் உள்ளது. இதுகுறித்து கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பலமுறை புகாரளித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதை கேட்ட அமைச்சர், உடனே அங்கிருந்த மருத்துவர்களை அழைத்து விசாரணை செய்ததில் 8 மருத்துவர்கள் செய்ய வேண்டிய பணியை 4 மருத்துவர்கள் செய்கிறோம்.

அதில் ஒரு மருத்துவரை திருமங்கலம் ஜிஹெச்சிற்கு கூடுதல் பொறுப்பாக அனுப்பப்பட்டு விடுகிறார். மற்றொரு மருத்துவர் கொரோனா வார்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மீதியுள்ள 2 மருத்துவர்கள் மட்டுமே இப்போது பணி செய்வதாக கூறினார்கள். பின்னர் அமைச்சர், ‘இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரை செய்கிறேன் என்றும், விரைவில் அனைத்து குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்படும்’ என்றார்.

Related Stories: