ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வெற்றி யாருக்கு என கணிப்பது கடினம்... ரிச்சர்ட் ஹாட்லீ சொல்கிறார்

வெலிங்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகளிடையே நடக்க உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார் என்பதை கணிப்பது மிகக் கடினம். இரு அணிகளுமே சமபலம் வாய்ந்தவையாக உள்ளன என்று நியூசிலாந்து அணி முன்னாள் நட்சத்திரம் ரிச்சர்ட் ஹாட்லீ கூறியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ஏஜியஸ் பவுல் மைதானத்தில் ஜூன் 18ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் தற்போது மும்பையில் இரண்டு வார தனிமைப்படுத்தலில் உள்ளனர். ஜூன் 2ம் தேதி இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது. ஏர்கனவே இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்பாக இங்கிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நிலையில், பரபரப்பான பைனலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து நியூசி. முன்னாள் நட்சத்திரம் ஹாட்லீ கூறியதாவது:

பைனலில் மோதும் இரு அணிகளுமே சமபலம் வாய்ந்தவையாக உள்ளன. தற்போதைய நிலையில் வெற்றி யாருக்கு என்பதை கணிப்பது மிகவும் கடினம். இந்த போட்டிக்காக யார் சிறப்பாகத் தாயாராகி இருக்கிறார்கள் மற்றும் இங்கிலாந்தில் நிலவும் பருவநிலைக்கு ஏற்ப வேகமாகத் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றியை வசப்படுத்தும் அணி எது என்பது முடிவாகும் என நினைக்கிறேன். போட்டியின் முடிவை தீர்மானிப்பதில் பருவநிலையின் பங்கு அதிகம் இருக்கலாம். மேகம் சூழ்ந்து குளிர்ச்சியான வானிலை நிலவினால் அது நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும். டியூக் வகை பந்துகள் இரு அணி வேகப் பந்துவீச்சாளர்களுக்குமே நன்கு ஒத்துழைக்கும் என நினைக்கிறேன். பந்து நன்றாக ஸ்விங்கானால்... நியூசி. வேகங்கள் சவுத்தீ, போல்ட், ஜேமிசன் அசத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன். ஆடுகளத்தில் இருந்து பந்து எகிறித் திரும்பினால் அது இரு அணி பேட்ஸ்மேன்களுக்குமே சவாலாக இருக்கும்.

இரு அணிகளிலுமே மிகத் தரமான பேட்ஸ்மேன்கள் இருப்பதால், இந்த போட்டி பார்ப்பதற்கு மிக மிக சுவாரசியமானதாக அமையும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் என்பது ஒரே ஒரு போட்டி தான். அதில் வெற்றி, தோல்வி குறித்து பெரிதாக கவலைப்படாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் இரு அணி வீரர்களும் கவனம் செலுத்துவார்கள். பொதுவான மைதானத்தில் விளையாடுவதால் உள்ளூர் அணிக்கான சாதகம் யாருக்கும் இருக்காது. குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கான பலன் தான் இந்த பைனல் வாய்ப்பு. இதை அடைந்திருப்பது இரு அணிகளுக்குமே கவுரவமான விஷயம். இவ்வாறு ஹாட்லீ கூறியுள்ளார்.

Related Stories: