ஜெனிவா ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரரை வீழ்த்தினார் பாப்லோ

ஜெனிவா- முன்னாள் நம்பர் 1 வீரர் ரோஜர் பெடரர், ஜெனிவா ஓபன் டென்னிசில், ஸ்பெயின் வீரர் பாப்லோ ஆண்டுஜாரிடம் தோல்வியடைந்தார். ஸ்விட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரமும், முன்னாள் நம்பர் 1 வீரருமான ரோஜர் பெடரர், நீண்ட இடைவெளிக்கு பின்னர், சர்வதேச டென்னிஸ் போட்டிகளுக்கு திரும்பியுள்ளார். பெடரருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அனைவரும் பெடரரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், ஜெனிவா ஓபன் டென்னிஸ் அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது என்றே கூற வேண்டும். ஏடிபி தரவரிசையில் தற்போது 8ம் இடத்தில் உள்ள ரோஜர் பெடரரும், 75ம் இடத்தில் உள்ள 35 வயதான பாப்லோ ஆண்டுஜாரும் நேற்று ஜெனீவா ஓபன் டென்னிசில் மோதினர்.

இதில் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை பாப்லோ கைப்பற்றினார். பதிலுக்கு 6-4 என்ற கணக்கில் பெடரர் 2வது செட்டை கைப்பற்ற, போட்டி விறுப்பான கட்டத்தை எட்டியது. 3வது செட்டிலும் துவக்கத்தில் பெடரரின் கையே ஓங்கியிருந்தது. பாப்லோவின் கேமை பிரேக் செய்து அந்த செட்டில் 4-2 என்ற கணக்கில் பெடரர் முன்னிலையில் இருந்தார். தனது கேம்களை தக்க வைத்துக் கொண்டாலே போதும் என்ற வலுவான நிலையில் பெடரர் இருந்தார். ஆனால் பாப்லோ நிதானமாக ஆடி, தனது அடுத்த கேமை தக்க வைத்துக் கொண்டார். அதோடு வரிசையாக 4 கேம்களை கைப்பற்ற, 6-4 என்ற கணக்கில் அந்த செட் அவர் வசமானது. இதன் மூலம் 6-4, 4-6, 6-4 என 3 செட்களில் பெடரரை வீழ்த்தி, பாப்லோ அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

தோல்விக்கு பின்னர் பெடரர் கூறுகையில், ‘‘3வது செட்டில் கிடைத்த வாய்ப்புகளை வீணடித்து விட்டேன் என்றே சொல்ல வேண்டும். போதுமான பயிற்சி எடுத்துக் கொள்ளாமல் வந்திருக்கிறேன். ஆனாலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் களிமண் மைதானத்தில் இந்த அளவு ஆடியிருக்கிறேன். இன்னும் சிறப்பாக ஆடியிருக்கலாம் என்று நினைக்கிறேன். தோல்வியடைந்தது ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால் ரசிகர்கள் நிரம்பிய மைதானத்தில் மறுபடியும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றதில் அதிக மகிழ்ச்சி. அடுத்து பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்க தேவையான பயிற்சிகளை எடுத்துக் கொள்ளப் போகிறேன்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: