அகமதாபாத்: இந்தியா – தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 5வது டி20 போட்டி இன்று, அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 2ல் வென்று, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த 4வது போட்டி கடும் பனிமூட்டம் காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில், இந்த அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி இன்று, குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது.
இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்ற வழிவகுக்கும். தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றால், தொடர் சமன் ஆகும். எனவே, இரு அணிகளுக்கும் இந்த போட்டி அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், டி20 போட்டிகளில் விளாசி ஆடக்கூடியவர் என்பதால் தொடர்ந்து அணியில் இடம்பெற்று வருகிறார். இருப்பினும், சமீபத்திய போட்டிகளில் தொடர்ந்து மோசமாக ஆடி விக்கெட்டுகளை இழந்து வருவதால், தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
எனவே, இன்றைய போட்டியில் சூர்யகுமார் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றி அணிக்கு வெற்றி தேடித் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நடப்பாண்டில், சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி மோதிய 20 போட்டிகளில் 18ல் அபார வெற்றி பெற்றுள்ளபோதும், இப்போட்டிகளில் அவர் ஒரு முறை கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சுப்மன் கில்லின் பேட்டிங்கும் இந்திய அணிக்கு கவலை அளிப்பதாக உள்ளது. அவரது கால் பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் கில் ஆடுவது சந்தேகமே.
இவர்களை தவிர, ஹர்திக் பாண்ட்யா, சிவம் தூபே உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால், இந்திய அணி வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணித்து வருகிறது. பந்து வீச்சில், அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, வருண் சக்ரவர்த்தி சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தென் ஆப்ரிக்கா அணியை பொறுத்தவரை, டெஸ்ட் போட்டிகளில் அதகளப்படுத்தி வந்தாலும், டி20 போட்டிகள், சிம்ம சொப்பனமாகவே திகழ்கின்றன. இன்றைய போட்டியில், தென் ஆப்ரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக, அய்டன் மார்க்ரம் களமிறங்க வாய்ப்புள்ளது. அந்த அணியின் இளம் வீரர் டெவால்ட் புரூவிஸ் ஃபார்முக்கு திரும்பினால், அணியின் பேட்டிங் லைன் வலிமை பெறும்.
