ஹாங்ஸூ: பிடபிள்யுஎப் உலக டூர் பேட்மின்டன் பைனல்ஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை அபார வெற்றி பெற்றது. சீனாவின் ஹாங்ஸூ நகரில், பிடபிள்யுஎப் உலக டூர் பேட்மின்டன் பைனல்ஸ் போட்டிகள் நேற்று துவங்கின. இந்த போட்டிகளில் ஆட, இந்தியாவை சேர்ந்த சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், நேற்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் சாத்விக், சிராக் இணை, சீனாவை சேர்ந்த, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்களான லியாங் வெ கெங், வாங் சாங் இணையுடன் மோதினர்.
3 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் முதல் செட்டை, சீன வீரர்கள் 21-12 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக கைப்பற்றினர். இருப்பினும், அதன் பின் நடந்த இரு செட்களையும் 22-20, 21-14 என்ற புள்ளிக் கணக்கில் சாத்விக், சிராக் இணை வசப்படுத்தியது. அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இதையடுத்து, இன்று நடக்கும் 2வது சுற்றுப் போட்டியில் இந்தோனேஷியாவின் ஃபஜர் அல்பியான், முகம்மது ஷொகிபுல் ஃபிக்ரி இணையுடன் இந்திய வீரர்கள் மோதவுள்ளனர். சாத்விக், சிராக் ஷெட்டி இணை, இந்தாண்டில், ஹாங்காங் ஓபன் பேட்மின்டன், சீனா மாஸ்டர்ஸ் தொடர்களில் இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
