திருப்பதி சேஷாசலம் மலையில் வைரம், வைடூரியம் புதையல் எடுக்க சுரங்கப்பாதை அமைத்த 6 பேர் கைது: ஓராண்டாக 80 அடி தூரம் தோண்டியது அம்பலம்

திருமலை: திருப்பதி சேஷாசலம் மலையில் வைரம், வைடூரியம் புதையல் எடுப்பதற்காக சுரங்கப் பாதை அமைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓராண்டாக 80 அடி தூரத்துக்கு தோண்டியது அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி எம்ஆர் பள்ளியில் வசித்து வருபவர் மக்கு நாயுடு. இவர் அப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக கூலியாட்களை வைத்து கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலை சேஷாசல மலைத்தொடரில் புதையல் இருப்பதாக நெல்லூரை சேர்ந்த ராமையா என்கிற சாமியார் மக்கு நாயுடுவுக்கு தெரிவித்துள்ளார். மேலும், இந்த மலையில் 120 அடி தூரம் சுரங்கப்பாதை தோண்டினால், இரண்டு அறைகளில் வைரம், வைடூரியங்கள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய மக்கு நாயுடு அந்த புதையலை எடுக்க முடிவு செய்தார்.

இதற்காக உள்ளூர் கூலி தொழிலாளர்களை வைத்தால் அனைவருக்கும் தெரிந்து விடும் என்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த கூலியாட்கைளை  வைத்து சுரங்கப்பாதை தோண்டும் பணியை மாதத்திற்கு ஒருமுறை கூலியாட்ளை மாற்றி வரவழைத்து கடந்த ஓராண்டாக தோண்டி வந்துள்ளார். சுமார் 80 அடி தோண்டியபோது பெரிய பாறை ஒன்று இடையூறாக வந்ததால் அதை அகற்றுவதற்கு மக்குநாயுடு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திறமை வாய்ந்த 5 கூலியாட்களை அழைத்து வந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சேஷாசல மலைக்கு சென்றுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் திருமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மக்குநாயுடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 5 பேரை கைது செய்து, சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, 80 அடி தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வனத்துறை, தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் போலீசார் என மூன்று துறையினர் கண்காணித்து வரக்கூடிய நிலையில் இவர்களையும் தாண்டி எவ்வாறு கடந்த ஓராண்டாக செயல்பட்டு 80 அடி தூரத்திற்கு இவர்கள் சுரங்கப்பாதையை தோண்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், தீவிர விசாரணை செய்வதற்காக அவர்களை போலீஸ் காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

>