மத்திய அரசின் கொள்கை வகுப்பை விமர்சித்த அறிவியல் ஆலோசனை குழு தலைவர் விலகல்

புதுடெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசின் கொள்கை வகுப்பை விமர்சித்த அறிவியல் ஆலோசனை குழு தலைவர் ஷாகித் ஜமீல் அப்பொறுப்பிலிருந்து விலகியிருப்பது பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் உருமாற்றங்களைக் கண்டறிய மத்திய அரசால் இன்சாகாக் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக செயல்பட்டவர் மூத்த வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல். இக்குழு, வைரசின் உருமாற்றங்கள் மற்றும் அதன் தீவிரம் குறித்து அரசுக்கு ஆலோசனை தெரிவிக்கும். இந்நிலையில், ஆலோசனைக் குழுவினர் தலைவர் பொறுப்பிலிருந்து ஜமீல் திடீரென விலகி உள்ளார். தனது விலகலை உறுதிப்படுத்திய அவர், அதற்கான காரணங்களை வெளியிட மறுத்துள்ளார். இதற்கிடையே, சமீபத்தில் ஜமீல் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், கொரோனாவை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் மேலாண்மையில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டிய அவர், குறைந்த சோதனை, தடுப்பூசியின் மெதுவான வேகம், தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் அதிகளவில் சுகாதாரப் பணியாளர்களின் தேவை குறித்தும் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, இந்திய விஞ்ஞானிகள் ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட கொள்கை வகுப்பிற்கு எதிராக பிடிவாதமான சில எதிர்ப்புகளை சந்தித்து வருவதாகவும் அவர் விமர்சித்திருந்தார். மேலும், கடந்த மார்ச் மாதமே இந்திய வகை கொரோனா வைரசின் அதிதீவிர பரவல் குறித்து அரசுக்கு எச்சரித்த போதிலும், மத, அரசியல் கூட்டங்களை கட்டுப்படுத்துவதில் அரசு எந்த கொள்கை முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். அதன் காரணமாகவே இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறி சென்றாக ஜமீல் குற்றம்சாட்டி இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் அவர் ஆலோசனை குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்களை தர மறுப்பு

கொரோனா வைரசை பற்றி மேலும் அறியவும், அதன் உருமாற்றத்தை கணிக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும் தற்போதைய கொரோனா பாதிப்பு தரவுகளை தர வேண்டுமென, கடந்த ஏப்ரல் 30ம் தேதி 800க்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகள் பிரதமரிடம் முறையிட்ட போதிலும் அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் ஜமீல் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வாத்து கூட்டத்திடமிருந்து வேறென்ன எதிர்பார்ப்பது?

ஜமீல் விலகலைத் தொடர்ந்து மத்திய அரசை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர். அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘நாட்டின் சிறந்த வைராலஜிஸ்ட் ஜமீல் விலகல் சோகத்தை தருகிறது. மோடி அரசாங்கத்தில் வல்லுநர்கள் சுதந்திரமாக பேசவும், சிந்திக்கவும் இடமில்லை’’ என்றார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர், ‘‘அரசியல் ஆதாரங்களை நம்பாத வாத்துக் கூட்டத்திடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும். பாஜ அரசில் ஜமீல் போன்றவர்கள் விலகுவதில் ஆச்சரியமில்லை’’ என்றார்.

Related Stories: