‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ எஜமானியின் தகன மேடையில் 4 நாளாக அமர்ந்திருந்த நாய்: வீட்டிற்கு அழைத்து வந்தும் மாயமானதால் கவலை

கயா: பீகாரில் இறந்த பெண்ணின் சடலம் எரிக்கப்பட்ட தகன மேடை அருகே, அவர் வளர்த்து வந்த நாய் 4 நாட்களாக இருந்த சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் கயா மாவட்டம் ஷெர்காட்டி அடுத்த சத்சங் நகரில் வசிக்கும் பகவன் ததேரா என்பவரின் மனைவி, கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிப்பால் இறந்தார். இவர், ஷெரு என்ற நாயை செல்லமாக வளர்த்து வந்தார். பகவன் ததேரா மனைவியின் சடலம் இறுதி சடங்கு ஷெர்காட்டியில் உள்ள ராம் மந்திர் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்த பெண்ணின் சடலத்தை எடுத்து சென்ற போது, அவர் வளர்த்து வந்த ஷெரு செல்லநாயும் பின்தொடர்ந்தே சென்றது.

அந்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர், அனைவரும் வீடு திரும்ப தொடங்கினர். ஆனால், அந்த நாய் சுடுகாட்டிலேயே சோகமாக அமர்ந்திருந்தது. சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்துவிடும் என்று நினைத்து, பகவன் ததேரா மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பினர். ஆனால், தொடர்ந்து 4 நாட்களாக அந்த நாய் வீடு திரும்பவில்ைல. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சுடுகாட்டிற்கு சென்று மீண்டும் பார்த்தனர். அங்கே எவ்வித உணவும் சாப்பிடாமல், தனது எஜமானி தகனம் செய்த இடத்திலேயே சோகம் கலந்த மயக்கத்துடன் அமர்ந்திருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள், ஷெருவை வீட்டுக்கு அழைத்து வர முயன்ற போது, அது அவர்களை நோக்கி குரைத்தது.

பின்னர் எப்படியோ, ஷெருவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஒரு சில நாட்கள் உணவு கொடுக்க முயன்று வீட்டிலேயே அடைத்து வைத்தனர். ஆனால், அடுத்த ஒருசில நாட்களில் வீட்டிலிருந்த ஷெரு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அதன்பின் எங்கெங்கோ தேடியும் ஷெருவை காணவில்லை. தனது எஜமானி பெண் இறந்த சோகத்தில், தானும் உணவு உண்ணாமல், 4 நாட்களாக தகன மேடை அருகே அமர்திருந்த ஷெரு, ஒரு நன்றியுள்ள பிராணி என்பதை நிரூபித்துள்ளது. தனக்கு உதவி செய்தவர்களை சக மனிதர்களே மறக்கும் இந்த காலத்தில், உணவளித்த அந்த பெண்ணின் இறப்பை ஷெருவால் மறக்கமுடியவில்லை.

அது இப்போது எங்கு சென்றது என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து இறந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறுகையில், ‘தெருவில் சுற்றித் திரிந்த ஒரு நாய்க்கு இறந்த பெண் அன்போடு உணவளித்தாள். பின்னர் அதற்கு ஷெரு என்று பெயர் வைத்து, தனது வீட்டிேலயே வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு தேவையான உணவு, இருப்பிடம், பொது இடங்களுக்கு அழைத்து செல்லுதல் என்று, அந்த பெண் நிறைய அன்பு செலுத்துவார். தற்போது அந்த பெண் இறந்ததால், தன்னிடம் அன்பு செலுத்த இனி யார் இருப்பார்கள்? என்ற ஏக்கத்தில் வீட்டிற்கு அழைத்து வந்தும், எங்கேயோ ஓடிவிட்டது’ என்று கவலையுடன் தெரிவித்தனர்.

Related Stories: