கொரோனா 2ம் அலையை கையாண்டதில் மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு!: வைரஸ் ஆராய்ச்சி வல்லுநர் ஷாஹித் ஜமீல் திடீர் பதவி விலகல்..!!

டெல்லி: இந்திய சார்ஸ் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி கூட்டமைப்பை சேர்ந்த வல்லுநர் ஷாஹித் ஜமீல் பதவி விலகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட கொரோனா வைரஸ் உருமாற்றம் குறித்த ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆலோசனை குழு தலைவராக பதவி வகித்து வந்த ஷாஹித் ஜமீல் அனுப்பியுள்ள தமது பதவி விலகல் கடிதத்தில் காரணம் எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் கொரோனா 2ம் அலையை மத்திய அரசு கையாண்டதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே அவரது பதவி விலகளுக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது. 

சமீபத்தில் ஷாஹித், எதையும் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆய்வாளர்கள் இருப்பதாகவும், ஆதாரங்களின் அடிப்படையிலேயே திட்டங்கள் உருவாக்கப்படுவது குறித்து அவர் தெரிவித்திருந்தார். கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் நாட்டில் கொரோனா 2ம் அலையின் தாக்குதல் பற்றியும், உருமாறிய வைரஸின் தொற்று வீரியம் குறித்தும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளை எச்சரித்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

ஆனால் அதனை அலட்சியம் செய்த மத்திய அரசு, கும்பமேளா உள்ளிட்ட மக்கள் பெருமளவு திரளும் விழாக்களுக்கு அனுமதி அளித்தது, தேர்தல் பிரச்சார கூட்டங்கள், மாநாடுகளை நடத்தியதும் தான் இன்று இந்தியா எதிர்கொண்டுள்ள பெரும் துயரத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே ஷாஹித் ஜமீல் பதவி விலகலுக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இது குறித்து சக வல்லுனர்களோ, மத்திய அரசு தரப்பிலோ கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டனர். 

Related Stories: