கொரோனா மேலாண்மையில் கிராமப்புறங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை; மத்திய அரசு வெளியீடு

புதுடெல்லி: கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சிகிச்சை மையங்கள் அமைப்பது உள்ளிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா 2வது அலை நகர்ப்புறங்களை மட்டுமின்றி குக்கிராமங்களிலும் வேகமாக பரவி வருகிறது. மலைவாழ் பழங்குடியினருக்கு இம்முறை கொரோனாவுக்கு தப்பவில்லை. தொடர்ந்து கிராமங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  அதிகரிப்பதைத் தொடர்ந்து, கிராமப்புறங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

* அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகளில் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் பரிசோதனை கருவிகள் வைத்திருக்க வேண்டும்.

* அறிகுறி இருப்பவர்கள், கொரோனா பாசிட்டிவுடன் லேசான பாதிப்புள்ளவர்களுக்காக 30 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்த வேண்டும். அதில், அறிகுறி இருப்பவர்கள், பாசிடிவ் ஆனவர்கள் தனித்தனியாக இருக்க  ஏற்பாடு செய்ய வேண்டும்.

* கிராம சுகாதார மற்றும் ஊட்டச்சத்து குழுவினர் உதவியுடன் ஆஷா பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

* கொரோனா உறுதியானவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், தெர்மா மீட்டர் ஆஷா பணியாளர்கள் மூலமாக வழங்கப்பட வேண்டும். தொற்றிலிருந்து மீண்ட பிறகு அவற்றை வாங்கி ஆல்கஹால் சானிடைசர் மூலம் சுத்தம் செய்து பிறகு வழங்க  வேண்டும்.

* லேசான அறிகுறி இருப்பவர்கள் வீட்டிலோ அல்லது கொரோனா சிகிச்சை மையங்களிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதும். மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை.

* தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு பாராசிட்டமல் 500எம்ஜி, ஐவர்மெக்டின், இருமல் மருந்து, மருத்துவர்கள் பரிந்துரைத்த மல்டி விட்டமின் மாத்திரை, விழிப்புணர்வு எச்சரிக்கை நோட்டீஸ்கள், அவசர காலத்தில் தொடர்பு கொள்ள  வேண்டிய தொலைபேசி எண்கள், டிஸ்சார்ஜ் வழிமுறைகள் போன்றவை அடங்கிய கிட் வழங்கப்பட வேண்டும்.

* பொது அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகள், சமூக கூடங்கள், திருமண மண்டபங்கள், பஞ்சாயத்து கட்டிடங்கள் ஆகியவற்றை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றலாம்.இவ்வாறு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Stories: