தினசரி பலி 4,077 ஆக பதிவு: கொரோனா பாதிப்பு குறைந்தது

புதுடெல்லி:  இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது சற்று குறையத் தொடங்கி உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3 லட்சத்து 11 ஆயிரத்து 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த  25 நாட்களுக்குப் பிறகு இது குறைந்த அளவாகும். கடைசியாக கடந்த ஏப்ரல் 21ம் தேதி 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேர் வைரசால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 2 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 77 ஆக உள்ளது.

மேலும், நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 62 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 36 லட்சத்து 18 ஆயிரத்து  458 ஆக சரிந்துள்ளது. குணமடைவோர் விகிதம் 84.25 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், நேற்று ஒரே நாளில் 4,077 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரத்து 284  பேர் பலியாகி உள்ளனர். டெல்லியில் பாதிப்பு குறைந்த போதிலும் அங்கு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரியானாவிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாநில  முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

கொரோனா நிலவரம் குறித்து சட்டீஸ்கர், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று பேசினார். அப்போது மாநிலங்களில் பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்த  அவர், தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். பிரதமர் மோடி தொடர்ந்து பல்வேறு மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

காங். எம்பி காலமானார்

காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான ராஜீவ் சதவ் (46) புனேவில் நேற்று காலமானார். கடந்த ஏப்ரல் 22ம் தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர், குணமடைந்த பின்னர்  சைட்டோமெலகோவைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இந்நிலையில் நேற்று காலமானார். அவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு எனவும், நல்ல நண்பனை இழந்ததால் மிகவும் வருந்துவதாகவும்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் சதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>