பிரதமரை விமர்சித்த புகாரில் 17 பேர் கைது ‘எங்களை கைது செய்யுங்கள்’; காங். தலைவர்கள் ஆவேசம்

புதுடெல்லி: பிரதமரை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்களை போலீசார் கைது செய்ததற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடியின் தடுப்பூசி கொள்கையை விமர்சித்து போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பாக போலீசார் 17 பேரை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘மோடி ஜீ ஏன் எங்கள் குழந்தைகளின் கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறீர்கள்’ என்ற போஸ்டரை பகிர்ந்து ‘‘என்னையும் கைது செய்யுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.  

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘இதுபோன்ற போஸ்டரை எனது வீட்டின் சுற்றுச்சுவரில் ஒட்டுவேன். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்னை கைது செய்யட்டும் . பிரதமர் மோடியை விமர்சித்து போஸ்டர்  ஒட்டுவது தற்போது குற்றமா? இந்தியா இப்போது மோடி தண்டனை சட்டத்தால் நடத்தப்படுகின்றதா? கொரோனா நோய் தொற்றுக்கு இடையே டெல்லி காவல்துறை வேலையில்லாமல் இருக்கிறதா?’ என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, ‘பொதுமக்களுக்கு தடுப்பூசி, ஆக்சிஜன் , மருந்துகள் கிடைக்கவில்லை என்றால் பிரதமரிடம் கேள்வி கேட்கப்படும். என்னுடைய தடுப்பூசி எங்கே?  என்னுடைய ஆக்சிஜன் எங்கே? நாங்கள் தொடர்ந்து  கேள்வி கேட்போம். என்னை  கைது செய்யுங்கள்’ என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Related Stories: