தனிநபர் கொள்கை குறித்த வாட்ஸ் அப் கெடு முடிந்தது எந்நேரத்திலும் சேவை ‘கட்’

புதுடெல்லி: இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய தனிநபர் கொள்கையை வெளியிட்டது. இதன்படி, பயனர்களின் தகவல்கள் வணிக நோக்கத்திற்காக தனது தாய்  நிறுவனமான பேஸ்புக்குடன் பகிரப்படும் என வாட்ஸ் அப் அறிவித்தது. மே 15ம் தேதிக்குள் புதிய கொள்கையை ஏற்காதவர்கள் கணக்குகள் நீக்கப்படும் என எச்சரித்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. புதிய கொள்கை குறித்து பலமுறை  விளக்கம் அளித்த வாட்ஸ் அப், பின்னர் மே 15க்குப் பிறகு புதிய கொள்கையை ஏற்காதவர்கள் கணக்குகள் நீக்கப்படாது என அறிவித்தது. ஆனாலும், அவர்களுக்கான சேவை படிப்படியாக குறைக்கப்படும் என கூறியுள்ளது.

இந்நிலையில், வாட்ஸ் அப் விதித்த மே 15 கெடு இன்றோடு முடிந்துள்ளது. இனி அடுத்தகட்டமாக குறிப்பிட்ட பயனர்களுக்கு நினைவூட்டல் தகவல் நிரந்தரமாக வைக்கப்படும். அப்போதும் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் எந்த நேரத்திலும்  சேவைகள் குறைக்கப்படலாம். இதற்கிடையே, ஜூம், ஆரோக்கிய சேது, ட்ரூகாலர் போன்ற பிற ஆப்களில் சேகரிக்கப்படும் தகவல்களையே வாட்ஸ்அப்பும் பயனாளர்களிடம் கேட்பதாகவும், இதில் சர்ச்சைக்குரிய எந்த விஷயமும் இல்லை என்றும் கூறி உள்ளது.

Related Stories: