கேரளாவில் ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் லட்சத்தீவுக்கு அருகே நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மிகத் தீவிர தாழ்வு மண்டலமாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களிலும், நாளை (15ம் தேதி) மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரள கடலோர பகுதிகளில் புயல் வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருவனந்தபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>