மருத்துவமனை வார்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயின் ஆக்சிஜன் குழாயை பிடுங்கிய கொள்ளையர்: நள்ளிரவில் விழித்திருந்து உயிரை காப்பாற்றிய மகன்

முரார்: மத்திய பிரதேசத்தில் நோயாளி தாயிடம் கொள்ளையடிக்க, அவரது ஆக்சிஜன் குழாயை பிடுங்கிய கொள்ளையர்களை, அவரது மகன் விரட்டியடித்த சம்பவம் நடந்தது. மத்திய பிரதேச மாநிலம் குடா பகுதியைச் சேர்ந்தவர் பூனம் வீரா (49). கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த இவருக்கு  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதனால், அருகில் உள்ள மருத்துவமனையில் பூனம் வீராவை, அவரது மகன் தீபக் சேர்த்தார். கொரோனா நோய்த்தொற்றால் பூனம் வீராவின், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டன. ஆபத்தான நிலையில் பூனம் இருந்ததால், சில நாட்கள் மட்டுமே அவர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், அவரது மகன் தீபக், தனது தாயை முரார் மாவட்ட மருத்துவமனையின் கோவிட் வார்டில் அனுமதித்தார்.

இந்த மருத்துவமனையின் வளாகத்திற்கு வெளியே உட்கார்ந்து கொண்டே, தனது தாயை தீபக் கவனித்து வந்தார். அவ்வப்போது, அவர் தனது தாயை ஜன்னல் வழியாகப் பார்ப்பார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக தீபக் எழுந்து சென்றார். அப்போது, மருத்துவமனை வார்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது தாயுடன் இணைக்கப்பட்ட ஆக்சிஜன் குழாயை, இரண்டு மர்ம நபர்கள் வெளியே பிடுங்கி எடுப்பதை ஜன்னல் வழியாக பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே கூச்சலிட்ட தீபக், மருத்துவமனையின் உள்ளே சென்று, அந்த மர்ம நபர்கள் இருவரையும் பிடிக்க முயன்றார். ஆனால், அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

தகவலறிந்த போலீசார், தப்பியோடிய 2 பேரையும் தேடிவருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் காதில் இருந்த ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளனர். நோயாளி பெண் கூச்சலிடுவார் என்பதால், முதலில் அவரது ஆக்சிஜன் குழாயை  பிடுங்கியுள்ளனர். அதனை அவரது மகன் பார்த்ததால், இருவரும் தப்பிவிட்டனர். மகனின் செயலால் தாயின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தலைமறைவான இருவர் குறித்தும் சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் கண்டுள்ளோம். மருத்துவமனையில் பணியாற்றும் தோட்டக்காரர்களாக இருக்கலாம். தற்போது, அவர்கள் மருத்துவமனைக்கு வராததால், அவர்கள் மீது சந்தேகம் அதிகரித்துள்ளது’ என்றனர்.

Related Stories: