கோவா அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 26 பேர் அடுத்தடுத்து பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?

பானாஜி: கோவா அரசு மருத்துவமனையில் சுமார் 4 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் 26 பேர் பலியாகி உள்ளனர். ஆக்சிஜன் இல்லாமல் அவர்கள் இறந்தார்களா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. கோவா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை 26 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து இறந்தனர். இத்தகவலை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே உறுதிபடுத்தினார். அவர் அளித்த பேட்டியில், ‘‘ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை பற்றாக்குறை நிலவுகிறது. இந்த மரணங்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா என்பது குறித்து உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். மாநில அரசு தரப்பில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த அம்மாநில முதல்வர் பிரமோத் சாவத், ‘‘ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. சிலிண்டர் சப்ளை செய்வது, பெறுவதில் சில குறைபாடுகள் உள்ளன. ஆனால் போதுமான ஆக்சிஜன்கள் இருப்பு உள்ளன’’ என்றார்.

Related Stories: