பீகார் மாநிலத்தை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும் கங்கையில் மிதக்கும் சடலங்கள்: 2வது நாளாக அதிர்ச்சி சம்பவம்

காஜிபூர்: பீகாரைத் தொடர்ந்து 2வது நாளாக உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் கங்கை நதியில் கொரோனா சடலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் பக்சர் பகுதியில் கங்கை நதிக்கரையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் நேற்று முன்தினம் கரை ஒதுங்கின. அழுகிய நிலையில் இருந்த சடலங்களை அங்குள்ள நாய்கள் கடித்துக் குதறின. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த சடலங்கள் கொரோனாவால் இறந்தவர்களுடையதா என சந்தேகம் எழுந்தது. தற்போது வடமாநிலங்களில் கொரோனா பலி அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் கிராமங்களில் கூட கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள கிராமமக்கள்

கொரோனாவால் இறந்தவர்கள் சடலத்தை மயானத்தில் எரித்தால் அதன் மூலம் காற்றில் வைரஸ் பரவி அனைவரையும் தாக்கும் என நம்புகின்றனர். இதனால் அவர்கள்தான் சடலங்களை எரிக்காமல் கங்கையில் போடுகிறார்களா என சந்தேகம் எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச எல்லையில்தான் பக்சர் பகுதி அமைந்துள்ளது. எனவே உபியில் இருந்து கங்கையில் போடப்பட்ட சடலங்கள் கரை ஒதுங்கியிருப்பதாக பக்சர் உள்ளாட்சி அதிகாரிகள் புகார் கூறினர். இந்நிலையில், 2வது நாளாக நேற்றும் கங்கை நதியில் கொரோனா சடலங்கள் கரை ஒதுங்கின. இம்முறை சடலங்கள் ஒதுங்கியிருப்பது உத்தரப்பிரதேச மாநிலத்தின் காஜிபூரில். பக்சர் பகுதியில் இருந்து காஜிபூர் 55 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அங்கு 12க்கும் மேற்பட்ட சடலங்கள் கங்கையில் கரை ஒதுங்கி உள்ளன.இது குறித்து காஜிபூர் கலெக்டர் எம்பி சிங் கூறுகையில், ‘‘தகவல் கிடைத்து அங்கு விரைந்தோம். அப்பகுதியில் விசாரணை நடந்து வருகிறது. தகவல்களை சேகரித்து வருகிறோம்’’ என்றார். கங்கையை ஒட்டிய பகுதி மக்கள் கூறுகையில், ‘‘துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து நாங்கள்  மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆற்றில் கொரோனா சடலங்கள் கிடப்பதால் பலருக்கும் வைரஸ் பரவுமோ என்ற பயத்தில் இருக்கிறோம்’’ என்றனர். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மோடி அரசு கங்கையை புனித தாயாக கருதும் நிலையில், ஆற்று நீரை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த சடலங்கள் அனைத்தும், 5, 6 நாட்களுக்கு முன்பு இறந்தவர்களுடையதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆம்புலன்சில் இருந்து சடலங்கள் வீச்சு

இதற்கிடையே, உபியின் பல்லியா எல்லையில் பீகாரின் சரண் பகுதியில் ஜெய்பிரபு சேது பாலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் டிரைவர் சில கொரோனா சடலங்களை கீழே வீசி எறிவது போன்ற வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. இதுபோல ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சடலங்களை பாலத்தின் கீழ் வறண்ட ஆற்று மணலில் போட்டுச் செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆற்றங்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட சுமார் 71 சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் முயற்சிகள் நடக்கின்றன.

‘புனித நதிகளில் ஓடும் சடலங்கள்’

கொரோனாவை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘எண்ணற்ற சடலங்கள் புனித நதிகளில் ஓடுகின்றன, மருத்துவமனைகளில் மைல் நீள வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள், அவர்களின் வாழும் உரிமை களவாடப்பட்டிருக்கிறது. மத்திய விஸ்டா திட்டத்தை தவிர வேறெதுவும் கண்ணுக்கு தெரியாத அந்த இளஞ்சிவப்பு கண்ணாடியை பிரதமர் மோடி கழற்றி வைக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

மறைக்கப்பட்ட சடலங்களா?

உத்தரப்பிரதேச மாநில பாஜ அரசு கொரோனா பலிகளை மறைப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கொரோனா பாதிப்பை மறைக்கும் விதமாக பலிகளை முறையாக வெளியிடுவதில்லை என கூறப்பட்டு வருகிறது. அவ்வாறு மறைக்கப்படும் சடலங்களைத்தான் இவ்வாறு கங்கையில் வீசியிருக்கிறார்களா என காங்கிரஸ் தலைவர்கள் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பாகி உள்ளது.

Related Stories: