உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளது: உலக சுகாதார நிறுவனம்

டெல்லி: கொரோனா தொற்று பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசிகள் மட்டுமே வழியாக இருக்கும் சூழலில் உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகிலேயே 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 4 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்ட முதல் நாடாக இந்தியா உள்ளது.

இப்படி ஒரு சூழலில் தடுப்பூசிகளை விரைந்து செலுத்துவதும் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதும் தான் நம்மை தற்காத்து கொள்வதற்கான முக்கிய வழிகள். தாமதித்தால் தடுப்பூசிகள் செயலிழக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சாமிநாதன்.

இந்தியாவில் கொரோனா 2வது அலையில் பரவி வருவது பி1 617 வகை நோய் கிருமி. உருமாறிய இந்த வைரஸின் வீரியம் மற்றும் பரவும் தன்மை முதல் அலையில் பரவிய வைரஸை விட பல மடங்கு அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மேலும் அமெரிக்கா, பிரிட்டன் சுகாதாரத்துறையினர் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளனர். இரண்டாம் அலை வேகமாக பரவ இதுவும் ஒரு காரணம். இதுமட்டுமல்லாமல் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மக்கள் கைவிட்டதும் முக்கிய காரணம் என்கின்றனர்.

தற்போது இந்தியாவில் கிட்டத்தட்ட 2 சதவீத பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்கும் நிலையில் வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்தால் அது மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்றும் அதனை தடுப்பூசிகளால் கூட தடுக்க முடியாத சூழல் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறார் டாக்டர் சௌமியா சாமிநாதன். முன்பாக இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கான வாய்ப்பு உள்ளதென்றும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் தலைமை விஞ்ஞான ஆலோசகர் அறிவுறுத்தி இருந்தார்.

Related Stories: