என்சிஎம்எஸ் பார்க்கிங் தளத்திற்கு உழவர் சந்தை மாற்றம்: பாதுகாப்பு இல்லை என விவசாயிகள், வியாபாரிகள் புலம்பல்

ஊட்டி:என்சிஎம்எஸ் பார்க்கிங் தளத்திற்கு உழவர் சந்தை மாற்றப்பட்டுள்ளதால் காய்கறிகளுக்கு பாதுகாப்பில்லை என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் உள்ள உழவர் சந்தை மற்றும் மார்க்கெட் ஆகியவைகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. இதன்படி ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள உழவர் சந்தை தற்போது என்சிஎம்எஸ் பார்க்கிங் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

நேற்று முதல் விவசாயிகள் அப்பகுதியில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். என்சிஎம்எஸ் பார்க்கிங் தளம் சர்ச்ஹில் பகுதியில் அமைந்துள்ளது. சர்ச்ஹில் பகுதி வனத்தை ஒட்டியுள்ள நிலையில், இப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர தோடர்களின் வளர்ப்பு எருமைகள் இப்பகுதியில் மேய்ச்சலுக்காக செல்வது வாடிக்கையாகும். மேலும், குதிரைகள் மற்றும் கால்நடைகளும் எளிதில் உள்ளே செல்ல வழியுள்ளது. இதனால், இரவு நேரங்களில் வெட்டவெளியில் வைத்துச் செல்லும் காய்கறிகளுக்கு பாதுகாப்பில்லை.

அதுமட்டுமின்றி, அங்கு தரையில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடாரங்களும் அமைக்க முடியாத நிலை உள்ளதால், மழை பெய்தால் காய்கறிகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதிக்கு கடைகளை மாற்ற நேற்று காலையில் வியாபாரிகள் தயக்கம் காட்டியது மட்டுமின்றி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், கட்டாயம் மாற்ற வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டதால், வேறு வழியின்றி என்சிஎம்எஸ் பார்க்கிங் தளத்தில் காய்கறி கடைகளை திறந்துள்ளனர். விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் உழவர் சந்தைக்கே மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கடந்த ஆண்டை போன்று சாந்திவிஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: