உலகிலேயே இந்தியாவில்தான் தடுப்பூசி அதிக விலைக்கு விற்பனை: தடுப்பூசி போட்டு முடிய 3 ஆண்டு ஆகிவிடும்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிக்காக உலகில் எந்த நாடும் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதில்லை. அனைத்து நாடுகளும் இலவசமாக தடுப்பூசியை போடுகின்றன.ஆனால் இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மத்திய அரசு ரூ.150க்கு தடுப்பூசியை வாங்கி தனியார்  மருத்துவமனைகளுக்கு வழங்கியது. இதில் சேவை கட்டணமாக ரூ.100 கூடுதலாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் நேரடியாக தடுப்பூசியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி தனியார் மருத்துவமனைகளுக்கு  கோவிஷீல்டு ஒருடோஸ் ரூ.600 என சீரம் நிறுவனமும், கோவாக்சின் ஒரு டோஸ் ரூ.1200 என பாரத் பயோடெக் நிறுவனமும் விலையை உயர்த்தின.

இதைத் தொடர்ந்து தற்போது முன்னணி தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டுக்கு ரூ.700 முதல் ரூ.900 வரையிலும்  கோவாக்சினுக்கு ரூ.1200 முதல் ரூ.1500 வரையிலும் கட்டணம்  வசூலிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்ததை விட கிட்டத்தட்ட 6 மடங்கு அதிக விலையை மக்கள் தர வேண்டி உள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகங்கள் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி, போக்குவரத்து, சேமிப்பு செலவு சேர்த்து கோவிஷீல்டு விலை 660-670 ஆகி விடுகிறது. 5-6% மருந்துகள் வீணாகின்றன. தடுப்பூசி போடும்  ஊழியர்களுக்க பிபிஇ கிட், மருத்துவ கழிவு அகற்றும் செலவு சேர்த்து ரூ.170-ரூ.180 ஆகிறது. எனவே ரூ.900 வசூலிக்க வேண்டி உள்ளது’’ என்கின்றனர்.

இந்நிலையில், 18-44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட அனுமதி வழக்கப்பட்ட பிறகு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலை 6 மடங்கு வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம், கொரோனா தடுப்பூசியை அதிக விலைக்கு விற்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக இது வரை கோவின் இணையதளத்தில் மொத்தம் 19 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு கொரோனா முதல் மற்றும் இரண்டாவது டோஸ்  வழங்குவது சராசரியாக 16.6 லட்சமாக குறைந்துள்ளது. இது ஏப்ரல் மாத தொடக்கத்தில் 40 லட்சமாக இருந்தது. கொரோனா தடுப்பூசி போடும் பணியின் வேகத்தின் அடிப்படையில் தற்போது வரை பதிவு  செய்துள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு குறைந்தது 3 மாதங்கள் வரை ஆகும். 18 வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த 94 கோடி பேருக்கு தடுப்பூசி போட மொத்தம் 170 கோடி டோஸ் தேவைப்படுகின்றது.    இதற்கு 1000 நாட்கள் அல்லது ஏறத்தாழ 3 ஆண்டுகள் ஆகும்.

17 கோடி எட்டி சாதனை

உலகிலேயே 17 கோடி பேருக்கு அதிவேகமாக தடுப்பூசி போட்டு இந்தியா சாதித்துள்ளது. இந்தியா 114 நாட்களில் 17 கோடியே 1 லட்சத்து 76 ஆயிரத்து 603 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய சுகாதார  அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்த இலக்கை சீனா 119 நாட்களிலும் அமெரிக்கா 115 நாட்களிலும் எட்டின. தற்போது அனைத்து மாநில அரசுகளிடமும் சேர்த்து 1 கோடி டோஸ் வரை கைவசம் இருக்கும்  நிலையில் அடுத்த 3 நாட்களில் மேலும் 9 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்பட இருப்பதாக மத்திய அரசு கூறி உள்ளது.

Related Stories: