இன்று பதவியேற்கிறார்: அசாம் முதல்வராகிறார் ஹிமந்தா பிஸ்வா சர்மா

புதுடெல்லி:  அசாம் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜவை சேர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்கிறார். அசாம் மாநிலத்தில் நடந்த சட்டமன் ற தேர்தலில் பாஜ கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. 60 தொகுதிகளில் பாஜவும், 15 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றன. பாஜ வெற்றி பெற்றபோதிலும்,  முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. கடந்த முறை முதல்வராக இருந்த சர்பானந்த சோனாவால் மற்றும் பாஜ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு பெரும் பங்காற்றிய ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோரில் யார் முதல்வராவது என்பதில் போட்டி நிலவியது. இதனை தொடர்ந்து இருவருக்கும் கட்சி மேலிடத்தில் இருந்து கடந்த வெள்ளியன்று அழைப்பு வந்தது. இருவரிடமும் தனித்தனியாகவும், ஒன்றாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மாநில பாஜ சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவர் பதவிக்கு சர்மா பெயரை முதல்வர் சோனாவால் மற்றும் மாநில பாஜ தலைவர் ரஞ்சித் குமார் தாஸ் ஆகியோர் முன்மொழிந்தார். வேறு யாருடைய பெயரும் முன்மொழியப்படவில்லை. தொடர்ந்து ஒரு மனதாக சர்மா, பாஜ சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர், எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இன்று பிற்பகல் 12 மணிக்கு பிஸ்வா முதல்வராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் அசாமில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

சோனாவால்ராஜினாமா

முன்னதாக நேற்று காலை மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஜகதீஷ் முக்தியிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து அடுத்த அரசு அமையும் வரை பதவியை தொடரும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

Related Stories: