இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு அசாம் மாநில முதல்வர் யார்?

புதுடெல்லி: அசாம் முதல்வர் யார் என்பது குறித்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறுகின்றது. அசாம் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றியது. கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் முதல்வர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகின்றது. கடந்த முறை முதல்வராக இருந்தவர் சர்பானந்த சோனாவால். இந்த முறை பாஜ கூட்டணிக்கு அதிக தொகுதிகளை கைப்பற்றுவதற்கு பெரும் பங்காற்றியவர் ஹிமாந்தா பி சர்மா. இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக கடந்த 2015ம் ஆண்டு பாஜவில் இணைந்தவர்.

இந்நிலையில் சர்பானந்த சோனோவால் மற்றும் சர்மா ஆகியோருக்கு கட்சி மேலிடத்தில் இருந்து கடந்த வெள்ளியன்று அழைப்பு வந்தது. அசாம் முதல்வர் யார் என்பது குறித்து தனித்தனியாக இருவரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது. இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் மூன்றாவது கட்டமாக இரு தலைவர்களுடனும் அசாமில் ஆட்சி அமைப்பது குறித்து பாஜ  மேலிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. பாஜ தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் சர்மா கூறுகையில், “ பாஜ சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிறன்று(இன்று) நடைபெறுகின்றது. இதில் சட்டமன்ற  தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றார்.

Related Stories: