மே.10 முதல், ஜூன் 27வரை கோடைகால விடுமுறை கொரோனா மையமாக மாறுகிறது உச்ச நீதிமன்ற வளாகம்

புதுடெல்லி: வரும் திங்கட்கிழமை தொடங்கி ஜூன் 27ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் நீதிமன்ற வளாகம் கொரோனா மையமாக அமைக்கப்பட உள்ளது. கொரோனா நோய் தொற்றின் முதல் அலையை சாதாரணமாக கட்டுப்படுத்திய இந்தியா, உலக நாடுகளுக்கு சிகிச்சை மருந்துகளையும், உபகரணங்களையும், தடுப்பூசிகளையும் வழங்கி உதவியது. ஆனால் தற்போது  கொரோனா 2வது அலையில் நாட்டில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி செல்கிறது. மேலும் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசி ஆக்சிஜன் ஆகியவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லியில் பராமரிப்பு மையங்கள் அமைக்க போதிய இடவசதியும் இல்லாமல் இருந்து வருகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் நிலவி வரும் வேலையில் உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

அதில்,” மே 10ம் தேதி முதல் அதாவது வரும் திங்கட்கிழமை முதல் ஜூன் மாதம் 27ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை தினமாகும். இதில் வழக்கம் போன்று சிறப்பு அமர்வு நீதிபதிகள் கொண்ட விசாரணை வீடியோ கான்பரன்ஸ் மூலம் முக்கிய வழக்குகளை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் முன்னதாக கொரோனா பாதிப்பின் பிரச்சனையின் காரணமாக இந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை ஒரு வாரம் முன்னதாக துவங்கும் என்றும், அதேப்போன்று இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் வளாகங்களில் கொரோனா பாதிப்படைந்தவர்களுக்கு படுக்கை வசதிகள், ஆர்டிபிசிஆர் சோதனை செய்வதற்கான வசதிகள் ஆகியவற்றை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு தலைமை நீதிபதி தரப்பிலும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி கோடை விடுமுறை காலத்தில் உச்ச நீதிமன்றம் கொரோனா மையமாக மாறுகிறது.

Related Stories: