கொரோனா நோயாளிகளிடம் பேய் உடை அணிந்து கொள்ளையடிக்கும் டாக்டர்கள்: அவதூறு பரப்பிய பாலிவுட் நகைச்சுவை நடிகர் மீது வழக்கு

மும்பை: கொரோனா நோயாளிகளிடம் பேய் உடை அணிந்து டாக்டர்கள் சிலர் கொள்ளையடிப்பதாக வீடியோ வெளியிட்ட பாலிவுட் நகைச்சுவை நடிகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலிவுட் நகைச்சுவை நடிகர் சுனில் பால், கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வீடிேயா ஒன்றை வெளியிட்டார். அதில், ‘90 சதவீத டாக்டர்கள் ‘பேய் உடை’ அணிந்து காலை முதல் மாலை வரை நோயாளிகளை பயமுறுத்துகின்றனர். கொரோனாவால் பாதித்த நோயாளிகள் இவர்களை பார்த்தே இறந்துவிடுவர். சில மருத்துவர்களின் செயலானது, ஏழை மக்களிடம் இருந்து கொள்ளை அடிப்பவர்களாக உள்ளனர்’ என்று அதில் தெரிவித்தார்.

இந்த வீடியோ சில நாட்கள் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை. ஆனால், மருத்துவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து மருத்துவ ஆலோசகர்கள் சங்கத்தின் (மும்பை) தலைவர் டாக்டர் சுஷ்மிதா பட்நகர் அந்தேரி காவல்நிலையத்தில், சுனில் பாலுக்கு எதிராக புகார் அளித்தார். அதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் 500 (அவதூறு) மற்றும் 505 (2) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், சுனில் பால் கைது செய்யப்படவில்லை. அவருக்கு எதிரான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், கைது நடவடிக்கை தொடங்கப்படும் என்று காவல் துறை அதிகாரி கூறினார்.

இந்நிலையில், சுனில் பால் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், ‘நான் ஏற்கனவே வெளியிட்ட வீடியோவில் பேசிய கருத்தால், யாராவது காயமடைந்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். ஏழை மக்கள் சிலர் கூறியபடி, 90% டாக்டர்கள் பேய்கள் உடையணிந்துள்ளனர்; சிலர் மட்டுமே மக்களுக்கு சேவை செய்கின்றனர் என்பதையே நானும் கூறினேன். சேவை செய்யும் மருத்துவர்கள் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. என் மீது வழக்கு பதிவு செய்திருப்பது தொடர்பாக, போலீசாரிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை’ என்றார்.

Related Stories: