ஒரே ஐ.பி. அட்ரசை கொண்டு இயங்கிய 34 இணைய தளங்கள்: பாஜக-வினரின் மோசடியை அம்பலப்படுத்திய இணையதளக் குழு

டெல்லி: பாஜக எதிர்ப்பு அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு எதிராக ஒரே ஐபி அட்ரசை பயன்படுத்தி பல்வேறு இணையத்தளங்கள் மூலம் கோடி கணக்கான ரூபாய் செலவழித்து பாஜக-வினர் பரப்புரையில் ஈடுப்பட்டு இருந்தது அம்பலமாகியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் தகவல் தொழில்நுட்ப அணியினர் மூலம் சமூக வலைத்தளங்களில் பரப்புரையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. முக்கியமாக தேர்தல் நேரங்களில் இந்த ஆட்கள் தங்களின் கட்சி சார்பாக டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிர பரப்புரையில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால், பாஜக-வினரோ சமூக வலைத்தள பயனர்களையே ஏமாற்றும் படியான நூதன மோசடி பரப்புரையில் ஈடுபட்டிருந்தது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆல்ட் நியூஸ் எனப்படும் தகவல் சரிபார்ப்பு இணையத்தளத்தை சேர்ந்த அபிஷேக் என்பவர் டிவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவு தொகுப்பு பாஜக-வினரின் நூதன மோசடியை அம்பலப்படுத்தி உள்ளது. ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் புலனாய்வில் Phir Ek Baar Modi Sarkar.com என்ற இணையத்தளத்தின் ஐபி அட்ரசை பயன்படுத்தி நாட்டின் பல்வேறு மொழிகளிலும் பாஜக-வினர் 34 இணையத்தளங்களை நடத்தி வந்தது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

jharkhand2019.com, chormachayeshor.com, ghargharraghubar.com போன்ற பல்வேறு பெயர்களில் வடஇந்திய மாநிலங்களிலும், புதுச்சேரியில் ஒளிரட்டும் புதுவை.காம் எனவும், தமிழ்நாட்டில் வளர்ச்சி பாதையில் தமிழகம்.காம் எனவும் இந்த இணையத்தளங்கள் இயங்கி வந்தன. இதையடுத்து கூடுதல் விசாரணையில் இறங்கிய தொழில்நுட்ப வல்லூநர்கள் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவை அணுகி பல்வேறு தகவல்களை பெற்று பாஜக-வினர் மேற்கொண்ட பல அதிர்ச்சிகரமான மோசடிகளை வெளிகொண்டுவந்துள்ளனர். ஒரே ஐ.பி. அட்ரசை பயன்படுத்தி இயங்கி வந்த 34 பாஜக ஆதரவு இணையத்தளங்களும் ஃபேஸ்புக்கில் உள்ள கணக்குகளுடன் இணைக்கப்பட்டவை.

ஒரே ஐ.பி அட்ரசை மூலம் நடத்தப்பட்ட 34 இணையத்தளங்கள் வாயிலாக செய்யப்பட்ட விளம்பரங்களுக்கு பணம் செலுத்தியவர்கள் யார் என்ற விவரம் முற்றிலும் மறைக்கப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தையும் ஆல்ட் நியூஸ் அம்பலப்படுத்தியதை தொடர்ந்து இந்த 34 இணையத்தளங்களில் பெரும்பாலானவை முடக்கப்பட்டுள்ளது. இப்படியாக யார் விளம்பரம் செய்கிறார்கள் என்று பயனர்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் தங்களின் அடையாளத்தை மறைத்து கொண்டும் கோடி கணக்கான ரூபாய் செலவழித்தும் மாற்று கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள், தலைவர்களுக்கு எதிராக பாஜக பரப்புரை செய்திருப்பதை ஆல்ட் நியூஸ் குழுவினர் அம்பலப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஒரே ஐ.பி. அட்ரசை கொண்டு இயங்கிய 34 இணைய தளங்கள்: பாஜக-வினரின் மோசடியை அம்பலப்படுத்திய இணையதளக் குழு appeared first on Dinakaran.

Related Stories: