பாளை ராஜகோபால சுவாமி கோயிலில் நாளைபங்குனி பிரமோற்சவ தேரோட்டம்

நெல்லை,ஏப்.4: பாளை ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் நாளை (5ம் தேதி) நடக்கிறது. இதில் திரளாகப் பங்கேற்கும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்க்கின்றனர். பாளையில் உள்ள பாரம்பரியமிக்க அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி பிரமோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான பங்குனி பிரமோற்சவ திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்து வந்தது.

திருவிழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி பல்லக்கு பவனியும், சிறப்பு திருமஞ்சனமும் நடந்துவருகிறது. மேலும் இரவில் சிம்ம வாகனம், அனுமன் வாகனம், ஆதிசேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது. 5ம் திருவிழாவையொட்டி கடந்த 31ம் தேதி அன்று காலை 10 மணிக்கு சுவாமி, தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்மனம் நடந்தது. தொடர்ந்து இரவு இரட்டை கருட சேவை நடந்தது. 9ம் திருவிழாவான இன்று (4ம் தேதி) காலை சுவாமி, தாயார்கள் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளியதும் வீதியுலா நடக்கிறது.

10ம் திருவிழாவான 5ம் தேதி நாளை காலை 9 மணிக்கு மேல் தாயார்களுடன் சுவாமி தேரில் எழுந்தருளியதும் தேரோட்ட வைபவம் நடக்கிறது. இதில் நெல்லை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளாகப் பங்கேற்கும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்க்க உள்ளனர். இரவு 7 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் கோலத்தில் சுவாமி பல்லக்கில் வலம் வரும் வைபவம் நடக்கிறது. 6ம் தேதி காலை 7 மணிக்கு தயார்கள் ருக்மணி, சத்யபாமா, சுவாமி ராஜகோபாலன், சக்கரத்தாழ்வார் ஆகியோர் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

The post பாளை ராஜகோபால சுவாமி கோயிலில் நாளை

பங்குனி பிரமோற்சவ தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: