தெலங்கானா ரயில் நிலையத்தில் ரயில் ஏறும்போது ஒரு செருப்பு தண்டவாளத்தில் தவறி விழுந்ததாக டுவிட் செய்த இளைஞர்: செருப்பை மீட்டு ஒப்படைத்த ரயில்வே அதிகாரிகள்

திருமலை: கன்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏறும்போது ஒரு செருப்பு தண்டவாளத்தில் தவறி விழுந்ததாக இளைஞர் டுவிட் செய்திருந்தார். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் செருப்பை மீட்டு ஒப்படைத்துள்ளனர். ரயில் ஏறும்போது செருப்பு காலில் இருந்து நழுவி விழுவது ஒவ்வொரு ரயில் பயணிக்கும் பொதுவான அனுபவமாகும். ஆனால் தெலங்கானா மாநிலம் காசிப்பேட்டை ரயில்வே போலீசார், ரயிலில் ஏறும் போது தவறி கீழே விழுந்த பயணி ஒருவரின் செருப்பை திருப்பிக் கொடுத்து தங்களது சேவையை வெளிப்படுத்தியுள்ளனர். தெலங்கானா ஜனகாமா மாவட்டம் சிலுக்குரு பள்ளகுட்டாவைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் கடந்த 1ம் தேதி ரயிலில் செகந்திராபாத் செல்ல இருந்தார்.

இதற்காக அவர் கன்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அந்த ரயில் ஏற்கனவே நகர்ந்து கொண்டிருந்ததால் ராஜேஷ் அவசரமாக ரயிலில் ஏறச் சென்றார். அப்போது ரயிலில் ஏற முடிந்தது. ஆனால் காலில் அணிந்திருந்த செருப்பு ஒன்று தண்டவாளத்தின் நடுவில் நழுவி விழுந்தது. இதனால் மனவேதனைக்கு உள்ளான ராஜேஷ் நான் மிகவும் விரும்பி வாங்கிய செருப்பு கால் தவறி ரயில் ஏறும்போது தண்டவாளத்தில் விழுந்து விட்டது என்று ரயில்வே அதிகாரிகளுக்கு ட்வீட் செய்தார். இதற்கு செகந்திராபாத் கோட்ட பாதுகாப்பு அதிகாரி டெபாஸ்மித் உடனடியாக செருப்பை மீட்குமாறு காஜிப்பேட்டை ஆர்.பி.எப்., போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் ராஜேஷ் செருப்பை மீட்டார். பின்னர் நேற்றுமுன்தினம் காசிப்பேட்டைக்கு கொண்டு வந்து ராஜேஷிடம் கொடுத்தனர். எனவே ரயிலில் ஏறும்போது செருப்பு நழுவி விட்டால் கவலைப் பட வேண்டியதில்லை. ரயில்வே அதிகாரிகளுக்கு டுவிட் போட்டால் போதும், நம்மிடம் வந்துவிடும் என்ற இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post தெலங்கானா ரயில் நிலையத்தில் ரயில் ஏறும்போது ஒரு செருப்பு தண்டவாளத்தில் தவறி விழுந்ததாக டுவிட் செய்த இளைஞர்: செருப்பை மீட்டு ஒப்படைத்த ரயில்வே அதிகாரிகள் appeared first on Dinakaran.

Related Stories: