பராமரிப்பு இல்லாத தென்காசி மாடவீதிகள் தூய்மைப்படுத்தி பேவர் பிளாக் சாலை அமைக்க வலியுறுத்தல்

தென்காசி : பிரசித்திப் பெற்ற தென்காசி  காசி விஸ்வநாதர் கோயில், பழமையும் பெருமையும் வாய்ந்த  புராதன சின்னமாக விளங்குகிறது. குற்றாலத்திற்கு அடுத்தப்படியாக தென்காசி  நகருக்கு பெருமை சேர்க்கும் பழமைவாய்ந்த கோயிலான காசிவிஸ்வநாதர்  ஆலயத்துக்கு நாடு முழுவதும் இருந்தும் ஆன்மீக பயணிகள்  தரிசனத்துக்கு வருகை தருகின்றனர்.  இங்கு ஆண்டுதோறும் இங்கு ஐப்பசி விஷூ திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள் மிகவும்  விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த காசி விஸ்வநாதர்  ஆலயத்தில் மாட வீதிகள் பராமரிப்பு இன்றி குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.  தென்காசி தெற்கு ரத வீதி, கீழ ரத வீதி, வடக்கு ரத வீதி, மற்றும் மேல ரத  வீதி ஆகிய நான்கு ரத வீதிகளுக்கும், கோயில் சுற்றுச்சுவற்றுக்கும் நடுவில்  அமைந்துள்ளது மாடவீதி. ஆனால் இந்த வீதி இருப்பதே பலருக்கும்  தெரிவதில்லை.

அந்த அளவிற்கு ஆட்கள் நடமாட்டம் இன்றி மரங்கள், புதர்கள்  வளர்ந்தும், குப்பை கூளங்கள் நிறைந்தும், திறந்தவெளி கழிப்பிடமாகவும்  அசுத்தமடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ஆகம  விதிகளின்படி ரத வீதி பகுதிகளில் ஏதேனும் அமங்கலமான சம்பவங்கள் நடைபெற்று  விட்டால் சுவாமிகள் வீதியுலா செல்வது தடைபட்டுவிடும். அதுபோன்ற சமயங்களில்  வீதியுலா தடைபடாமல் சுவாமிகள் வீதியுலா செல்வதற்காக  அமைக்கப்பட்டதுதான் மாடவீதி. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால்  ஆக்கிரமிப்பு நிறைந்தும், குப்பை கழிவுகள் கொட்டப்படும் திறந்தவெளி  கழிப்பிடமாகவும், இரவு நேரங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூகவிரோத  செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறி விட்டது.

கோயில் மற்றும் நகராட்சி  நிர்வாகம் மாட வீதியை தூய்மையாக பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.  கோயிலில் இருந்து அன்னதான கழிவுகள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் மாடவீதியில்  கொட்டாமல் அப்புறப்படுத்தப்பட வேண்டும். நகராட்சி சுகாதார பணியாளர்களும்  நாள் ஒன்றுக்கு இரண்டு முறை தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும். அத்துடன்  திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துபவர்கள் மீது காவல்துறையும் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் பக்தர்கள் கோயிலை சுற்றி  வலம் வரும் வகையில் பேவர் பிளாக் சாலை அமைத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: