‘‘கலெக்டர், எஸ்பிக்குதான் என் பேர சொல்லுவேன்’’ ஊரடங்கு சோதனையில் போலீசார் மடக்கியதால் வாலிபர் தர்ணா: வேலூரில் பரபரப்பு

வேலூர்: ஊரடங்கு சோதனையில் போலீசார் மடக்கியதால் வாலிபர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதோடு, தீக்குளிப்பு மிரட்டலும் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே சத்துவாச்சாரி போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 11 மணியளவில் 3 பைக்குகளில் வாலிபர்கள் சர்வீஸ் சாலையில் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி விசாரணை நடத்தினர். காவேரிப்பாக்கத்தில் ஒரு திருமணத்திற்கு கேட்ரிங்க் சர்வீஸ் முடித்துவிட்டு வருவதாக தெரிவித்தனர். திடீரென ஒரு வாலிபர் மட்டும் ‘‘எப்படி என் பைக்கை நீங்கள் நிறுத்தலாம்.

யார் உங்களை நிறுத்த சொன்னது?” என்று கேட்டு ரகளையில் ஈடுபட்டார். தொடர்ந்து போலீசாரை ஒருமையில் பேசி உள்ளார். மேலும் அந்த வாலிபர், ‘‘என் பெயர் விவரம் எல்லாம் உங்களிடம் தெரிவிக்க முடியாது. வேண்டுமானால் கலெக்டர், எஸ்பிக்குதான் என் பெயர் விவரங்களை தெரிவிப்பேன். நீங்கள் கூப்பிடுங்கள். இல்லை நானே வருகிறேன்’’ என்று கூறி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி நடந்து செல்ல முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில் அந்த வாலிபர் ஓட்டி வந்த பைக்கில் பெட்ரோல் டியூப்பை பிடுங்கி, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டினார். மேலும் அவரது பைக்கில் இருந்த உதிரி பாகங்களை கையால் உடைத்து வீசினார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை சமதானப்படுத்த முயன்றனர். இங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என கூறி சர்வீஸ் சாலையில் அமர்ந்து கொண்டார். அப்போது, அவ்வழியாக வந்த காட்பாடி தாசில்தார் பாலமுருகன் ஜீப்பை நிறுத்தி விசாரித்தார்.  போலீசார் விவரம் கூறியதும் அந்த வாலிபரை அழைத்து பேசினார். இதில் அந்த வாலிபர், வேலூர் அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் தமிழ்நாடு காவல் துறையில் 2ம் நிலை காவலருக்கு தேர்வு எழுதி வெற்றி பெற்று இருப்பதும், விரைவில் உடற்கல்வி தேர்வில் கலந்து கொள்ள இருப்பதும் தெரியவந்தது. அதன்பின் ‘‘வழக்குப்பதிவு செய்தால், வேலைக்கு கூட செல்ல முடியாது. நீ அமைதியாக சென்றுவிடு தம்பி’’ என்று தாசில்தார் கூறினார். இதையடுத்து  அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: