மே 1ம் தேதியே நடக்க இருப்பதாக தகவல் வருகிறது தபால் வாக்கு எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்க கூடாது: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக முறையீடு

சென்னை: தமிழகத்தில் தபால் வாக்கு எண்ணிக்கை மே 1ம் தேதியே நடக்க இருப்பதாக தகவல் வருகிறது. எக்காரணத்தை கொண்டும் தபால் வாக்கு எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்ய கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம், அதிமுக சார்பில் நேற்று ஒரு மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னை, தலைமை செயலக வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் கோரிக்கை ஒன்று அளித்துள்ளோம். தமிழகத்தில் தபால் வாக்கு எண்ணிக்கை மே 1ம் தேதியே நடத்தப்பட உள்ளதாக அதிமுக தலைமைக்கு தகவல் வருகிறது. எந்த காரணத்தை கொண்டும் முன்கூட்டியே, அதாவது மே 1ம் தேதி ஸ்டிராங் ரூம்களை திறந்து வாக்குகளை கட்டுக் கட்டாக பிரித்து வைக்கக்கூடாது.

தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் இருந்து அதிமுக வேட்பாளர்கள் மற்றும் தலைமை ஏஜென்ட்கள் எங்களுடைய கவனத்துக்கு இதை கொண்டு வந்த காரணத்தால் உடனடியாக தலைமை தேர்தல் ஆணையரிடமும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடமும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, எல்லா மாவட்ட தேர்தல் அதிகரிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து சட்டப்படி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் என்ன சொல்கிறதோ அந்த வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் மீது, யாரும் குறை சொல்லாத அளவுக்கு தன் கடமையை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேபோல் எந்த காரணம் கொண்டும் வாக்கு எண்ணும் மேஜைகளை குறைக்கக்கூடாது. தேர்தல் ஆணையமும், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் ஏஜென்ட்கள் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும், தடுப்பூசி போட வேண்டும் என சொல்லி இருக்கிறது. அதனால் அச்சப்பட தேவையில்லை. எனவே பழைய நிலை என்னவோ அதுதான் தற்போது வாக்கு எண்ணிக்கையின் போதும் தொடர வேண்டும்.

Related Stories: