எல்லையை சுதந்திரமாக கடக்க அனுமதிக்க வேண்டும் ஆக்சிஜன் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் கூடாது: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘ஆக்சிஜன் ஏற்றி வரும் வாகனங்கள் சுதந்திரமாக செல்வதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது,’ என்று மத்திய அரசு கடுமையாக உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால், நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இது கிடைக்காமல் ஏராளமான நோயாளிகள் இறந்து வருகின்றனர். தேசிய அளவில் இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இப்பிரச்னையை தீர்ப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. மேலும், மருத்துவம் உள்ளிட்ட 9 முக்கிய தொழிற்துறைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் சப்ளை செய்ய கட்டுப்பாடு விதித்துள்ளது. மற்ற தொழிற்சாலைக்கு வழங்கவும் தடை விதித்துள்ளது.  ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும்படி தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களில் மருத்துவ ஆக்சிஜனை ஏற்றி வருவதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில்,  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பினால் சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதை தடுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக  மருத்துவ ஆக்சிஜன் போக்குவரத்து, தடையின்றி உற்பத்தி செய்வது, அதை ஏற்றிச் சென்று விநியோகம் செய்வதை உறுதி செய்யும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா நேற்று உத்தரவிட்டுள்ளார். கடுமையான பேரழிவு மேலாண்மை சட்டம்- 2005ன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

* நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜன் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அவற்றின் அதிகாரிகள் தங்கள் அதிகார எல்லைக்குள் பின்வரும் நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.

* மருத்துவ ஆக்சிஜனை மாநிலங்களுக்கு இடையே எடுத்து செல்வதற்கான போக்குவரத்தில் எந்த கட்டுப்பாடுகளும், இடையூறுகளும் ஏற்படக் கூடாது.

* ஆக்சிஜனை மாநிலங்களுக்குள் எடுத்து செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு அனுமதிக்கும்படி போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

* மாநிலங்களில்  உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மாநிலத்துக்குள் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என தொழிற்சாலைகளை கட்டாயப்படுத்தக் கூடாது.

* ஆக்சிஜன் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு எந்த நேர கட்டுப்பாடும் விதிக்க கூடாது.  நகரங்களுக்கு உள்ளான விநியோகத்துக்கும் தடை இருக்கக் கூடாது.  

*  மாவட்ட கலெக்டர்கள், துணை ஆணையர்கள், மூத்த எஸ்பிக்கள், எஸ்பி.க்கள் இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் அதிகாரத்தை பெறுகின்றனர்.

* ஆக்சிஜன் ஏற்றி வரும் வாகனங்கள் தடுக்கப்பட்டாலோ, அனுமதிக்கபடாமல் இடையூறுகள் நடந்தாலோ, அதற்கு அந்த மாவட்ட கலெக்டர், எஸ்பி.யே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>