மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 3 கட்ட தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த இயலாது: மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் பதில்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 3 சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தும்படி இம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் 2ம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்துக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில், இதுவரை 5 கட்ட தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இன்று 6ம் கட்ட தேர்தலும், 26 மற்றும் 29ம் தேதிகளில் மீதமுள்ள 2 கட்ட வாக்குப் பதிவுகளும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், மீதமுள்ள இந்த 3 கட்டத் தேர்தல்களையும் ஒருங்கிணைத்து ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, சில தினங்களுக்கு முன் கோரிக்கை வைத்தார். திரிணாமுல் கட்சி சார்பில் கடிதமும் அனுப்பட்டது. இதற்கு கடிதம் பதில் அளித்து தேர்தல் ஆணையம் மம்தாவுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘திட்டமிட்டபடியே தேர்தல்கள் நடைபெறும். 3 கட்டத் தேர்தலை ஒருங்கிணைத்து நடத்துவது சாத்தியமில்லை,’ என்று கூறியுள்ளது.

* மோடி உருவாக்கிய பேரழிவு

மேற்கு வங்கத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘நாட்டில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் தணிந்து இருந்தது. ஆனால், மத்திய அரசின் தோல்வி, அலட்சியம் மற்றும் இயலாமை ஆகியவற்றின் காரணமாக 2வது அலை தீவிரமாகி உள்ளது. இது, பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவாகும். அதை நாடு எதிர்கொண்டுள்ளது. கொரோனா தடுப்பூசி சந்தையில் கிடைக்காததற்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: