போதிய பஸ்கள் இயக்கப்படாததால் தினமும் இரண்டரை கிமீ நடக்கும் மக்கள்-மனம் வைக்குமா போக்குவரத்து நிர்வாகம்?

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பெரியகோட்டை பகுதியை சுற்றி 10க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் அனைத்து வகையான தோட்டக்கலை பயிர்களும் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் சாக்கோட்டை, புதுவயல், கண்டனூர், கோட்டையூர், பள்ளத்தூர், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தவிர மதுரையில் இருந்து உதிரி பூக்கள் மொத்தமாக வாங்கி வந்து கட்டி சுற்றுப்புற பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இக்கிராம மக்கள் அதிகஅளவில் அரசு டவுன் பஸ்சைத்தான் பயன்படுத்துகின்றனர். அரசு சார்பில் காலை மற்றும் மாலை என இரண்டு வேளை மட்டும் பஸ் இயக்கப்படுகிறது. இடைப்பட்ட நேரங்களில் பஸ் சர்வீஸ் இல்லை. காய்கறி வியாபாரத்திற்கு சென்று விட்டு திரும்ப வரும் போது பஸ் இல்லாததால் விளக்கு ரோட்டில் இறங்கி இரண்டரை கிலோ மீட்டர் தூரம் நடந்து மக்கள் ஊருக்குள் வருகின்றனர். இந்நிலையை போக்க அரசு போக்குவரத்து நிர்வாகம் சார்பில் இடைப்பட்ட நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கிராம மக்கள் கூறுகையில், ‘‘காலை 6 மணிக்கு ஒரு பஸ் மற்றும் மாலை ஒரு பஸ் உள்ளது. இடைப்பட்ட நேரத்தில் பஸ் வருவது இல்லை.

காரைக்குடிக்கு காய்கறி கொண்டு செல்பவர்கள் இரண்டரை கிலோ மீட்டர் நடந்தே தான் செல்கின்றனர். மதுரை போய் பூ வாங்கிவிட்டு வர மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்லவும் நடந்தேதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒரு சில வீடுகளில் மட்டுமே டூவீலர் உள்ளது. அதுவும் பெட்ரோல் விற்கும் விலையில் டூவீலரில் கொண்டு சென்றால் கட்டுப்படியாகாது. முன்பு 2 மணி மற்றும் இரவு பஸ் இருந்தது. அதனை நிறுத்திவிட்டனர். 1,500 குடும்பங்கள் உள்ளோம். ஆனால் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதி இல்லை. ரோடு நன்றாக உள்ளது. எனினும் பஸ் இல்லாமல் என்ன பயன். 20 ஆண்டுகள் பின்னோக்கிய நிலையில் நாங்கள் உள்ளோம்’’ என்றார்.

Related Stories: