தொழில்துறைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் தடை!: கொரோனா சிகிச்சைக்கு தேவை அதிகரிப்பதால் மத்திய அரசு நடவடிக்கை..!!

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு தேவை அதிகரிப்பதால் தொழில்துறைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிப்பதை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இதன் தாக்கம் என்பதே அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழக்கும் அவலமும் நிகழ்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தொழில்துறைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிப்பதை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அதிக நோயாளிகள் கொண்ட மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜனின் தேவை அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஆய்வு செய்த மத்திய அரசின் சிறப்பு குழுவினர் அளித்த பரிந்துரைப்படி வருகின்ற 22ம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை 9 அத்தியாவசிய துறைகளை தவிர, பிற தொழில்துறைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிப்பதற்கு உற்பத்தியாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு தடைவிதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்த அடிப்படையில், அந்தந்த துறையினருக்கு தகுந்த அறிவுறுத்தல்களை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்றும் அஜய் பல்லா தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

>