மோடி ராஜினாமா செய்ய வேண்டும்: மம்தா ஆவேசம்

பராக்பூர்: ‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியதற்கான பொறுப்பை ஏற்று, பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்,’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறியதாவது: கொரோனா பரவல் தற்போது 2ம் அலையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போதைய இந்த நிலைக்கு பிரதமர் மோடியே காரணம். நோய் பரவலை கட்டுப்படுத்த நிர்வாக ரீதியான எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. அவரது சொந்த மாநிலமான குஜராத்திலேயே நிலைமை மோசமாக உள்ளது.

மேற்கு வங்கத்துக்கு 5.4 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி தேவை என்று பிரதமர் மோடிக்கு  கடிதம் எழுதினோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. நாடு முழுவதும் ஆக்சிஜன் சப்ளையிலும், ரெம்டெசிவிர் மருந்து சப்ளையிலும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால், இதையெல்லாம் கவனிக்காமல் மேற்கு வங்கத்தில் நடந்து வரும் தேர்தல் பேரணிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.

கொரொனா தடுப்பூசிகள் 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உலக நாடுகளுக்கு நீங்கள் உதவுவதை நாங்கள் குற்றம் சொல்லவில்லை. ஆனால், சொந்த நாட்டிலேயே தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும்போது உங்கள் தனிப்பட்ட புகழுக்காக எதற்காக வெளிநாடுகளுக்கு தானம் செய்கிறீர்கள்? கொரோனா பரவலை முறையாக கையாள தவறியதற்கு மோடி பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக, பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>