அந்தியூர் பகுதியில் கள்ளநோட்டு அச்சிட்ட 2 பேர் பிடிபட்டனர்: ரூ.2 லட்சம், பிரிண்டர் பறிமுதல்

அந்தியூர்: அந்தியூர் பகுதியில் கள்ள நோட்டு அச்சிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து ரூ.2 லட்சம், பிரிண்ட் மெஷினை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையத்தில் நேற்று போலீசார் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட ஆரம்பித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரை துரத்திப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பவானி பழனிபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (40) என்பதும், கள்ளநோட்டுகளை மாற்றுவதற்காக அந்தியூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்ததும் தெரியவந்தது.

அவரிடமிருந்த ரூ.19 ஆயிரத்து 500 கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவர் ஏற்கனவே 2018ல் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர். அந்தியூர் அருகே உள்ள மூக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வன் (எ) ராக்கி (55) என்பவர் வீட்டில் கள்ள நோட்டுக்களை அச்சிட்டதாக அவர் கூறினார். அங்கு சென்ற போலீசார் செல்வனை கைது செய்ததுடன் கள்ளநோட்டு அச்சிட்ட பிரிண்டர், இங்க் மற்றும் பிரிண்ட் செய்யப்பட்ட கள்ள நோட்டுக்கள் ரூ.500, ரூ.200 நோட்டுகள் என மொத்தம் ரூ 2 லட்சம், ஒருபுறம் மட்டும் பிரிண்ட் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் என அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: