25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட வேண்டும்: அரசுக்கு சோனியா வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘இளைஞர்களுக்கும் இணை நோய் இருப்பதால் 25 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும்,’ என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அது பற்றி ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று, அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் காணொலி மூலம் நடந்தது. இதில், மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில், சோனியா காந்தி பேசியதாவது: கொரோனா தொற்று தேசிய சவாலாகும். இது போன்ற தருணங்களில் கட்சி பாகுபாடின்றி, அனைத்து கட்சிகளின் கருத்து, பரிந்துரைகளை ஜனநாயக ரீதியில் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான ராஜ தர்மம். நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை அரசு நிறுத்தி வைத்து விட்டு, மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதை விடுத்து, நாட்டில் ஆயிரக்கணக்கோனர் கொரோனாவுக்கு பலியாகி வரும் நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பி தனது தாராள குணத்தை காட்டி, தற்பெருமை காட்டுவதால் என்ன பயன்?

தயார்படுத்தி கொள்வதற்கு ஓராண்டு கால அவகாசம் இருந்தும், அரசின் அலட்சியத்தால், மெத்தன போக்கால் தற்போது கொரோனா 2வது அலை பரவி வருகிறது. மக்கள் மீண்டும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியினர் கூறும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கேட்காமல், சிறுபிள்ளைத்தனமாக நீயா? நானா? என்று எதிர்க்கட்சியினரை தாக்கி பேசுவதற்கு மட்டுமே அமைச்சர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் மத்திய அரசு, பாஜ ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தருகிறது. காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணி கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் பிற மாநிலங்களின் கூக்குரலை செவி கொடுத்து கேட்பதில்லை.

கொரோனா தொற்றை கையாள மோடி தலைமையிலான அரசு முழுமையாக தயார்படுத்தவில்லை. எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள், கருத்துகள், பரிந்துரைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. தற்போதைய சூழலில், இளைய சமுதாயத்தினரும் ஆஸ்துமா, நீரிழிவு, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட இதர இணை நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதால், 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் அரசு தடுப்பூசி வழங்க வேண்டும். மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால், கூலித் தொழிலாளர்கள், ஏழைகள் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் வாழ்வாதாரத்துக்காக மாதம் ரூ. 6,000 வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

* ஜிஎஸ்டி விலக்கு

சோனியா காந்தி மேலும் பேசுகையில், ``கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்சிஜன், கருவிகள், உபகரணங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசு இன்னமும் 12 சதவீத ஜிஎஸ்டி வசூலித்து வருகிறது.  இவற்றுக்கு ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,’’ என்றார்.

* நியாயமான விலை வழங்க வேண்டும்

காரியக் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ``தடுப்பூசி மருந்து தயாரிப்பவர்களுக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டும். அப்போது தான் தேவைக்கேற்ப அவர்களால் தடுப்பூசிகளை வினியோகிப்பதை உறுதிப்படுத்த முடியும்,’’ என்றார்.

Related Stories:

>