கேரள போலீசாருக்கு மூக்குடைப்பு அமலாக்க அதிகாரிகள் மீதான வழக்குகள் ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது கேரள போலீசார் பதிவு செய்த வழக்குகளை  கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக  தூதரக பார்சலில்  தங்கம் கடத்திய வழக்கில் சொப்னா, சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில  மாதங்களுக்கு  முன்பு சொப்னா பேசிய ஒரு ஆடியோ சமூக வலை தளங்களில் வெளியானது.

அதில், தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும் தொடர்பு  இருப்பதாக கூற வேண்டும் என்று தன்னை அமலாக்கத் துறையினர்  மிரட்டியதாக  கூறியிருந்தார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதேபோல், முதல்வர் பெயரை கூறும்படி அமலாக்கத் துறை அதிகாரிகள் தன்னை மிரட்டியதாக  சந்தீப்  நாயரும் கேரள போலீசில் கூறியுயிருந்தார். இதையடுத்து. பொய் வழக்குகளில் கேரள முதல்வர் பினராய் விஜயமனை சிக்க வைக்க சதி செய்ததாக, அமலாக்கத் துறை அதிகாாரிகள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் 2 வழக்குகள்  பதிவு  செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி மத்திய அமலாக்கத் துறை   சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.  அதை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது கேரள  குற்றப்பிரிவு  போலீசார் பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

அதிகார மோதல் தொடருமா?

அமலாக்க அதிகாரிகள் மீது கேரள போலீசாரச் சதி வழக்கு பதிவு செய்வதை தொடர்ந்து, மத்திய - மாநில அரசுகள் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. விசாரணை நடத்திய அமலாக்க அதிகாரிகள் மீது மாநில போலீசால் சதி வழக்கு பதிவு செய்யப்பட்டது, நாட்டிலேயே இதுதான் முதல் முறை. உயர் நீதிமன்றத்தின் நேற்றைய உத்தரவின் மூலம், இந்த அதிகார மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கேரள போலீசார் மேல்முறையீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: