புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்தால் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்!: பொதுமக்களுக்கு ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை..!!

புதுச்சேரி: கொரோனா பரவல் அதிகரித்தால் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பொதுமக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் படுக்கைவசதி, வெண்டிலேட்டர் வசதியுடன் மருத்துவர் குழுவினரை உள்ளடக்கிய நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை ஆளுநர் மாளிகை முன்பு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, விவசாயிகள் கூடும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், 100 பேருக்கு மேல் தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த வாகனம் செல்லும். இந்த நடைமுறை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். பல இடங்களில் முழு அடைப்பு நடைமுறைப்படுத்தி இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் புதுச்சேரியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படாது. எனினும் மக்கள் விழிப்போடு இல்லாத பட்சத்தில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டால் பகுதி நேர ஊரடங்கு அமலாக்கப்படும் என்று எச்சரித்தார். தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரம் முக்கியம் என்பதால் அதை பாதிக்கும் வகையில் புதுச்சேரியில் முழு ஊரடங்கு போடப்படாது என்றும் ஆனால் கொரோனா பரவலை தடுக்க மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.

Related Stories:

>