நிலத்தடி நீராதாரத்தை அழிக்கும் தைல மர வளர்ப்பை தடைசெய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தைல (யூகலிப்டஸ்) மரங்கள் வளர்ப்பதை தடை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, காளையார்கோவில், தேவகோட்டை, சிவகங்கை, திருப்புத்தூர், மானாமதுரை, கல்லல், திருப்புவனம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் யூகலிப்டஸ் மரங்கள் அதிகமாக உள்ளன. இந்த மாவட்டத்தில் மட்டும் பல லட்சக்கணக்கான யூகலிப்டஸ் மரங்கள் அரசு புறம்போக்கு நிலங்கள், தனியார் நிலங்களில் காணப்படுகிறது. அரசு சார்பில் மரம் வளர்ப்பு திட்டங்கள் மூலம் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தைலங்கள் மற்றும் பேப்பர் தயாரிப்பதற்கு இம்மரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரம் வளர எந்த பராமரிப்பும் தேவையில்லை. ஒரு முறை நட்டால் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மரக்கட்டைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பதால் தனியார் நிலங்களிலும் இம்மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் நிலங்களில் இம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இம்மரங்கள் பூமியில் உள்ள நீரை சுமார் நூறு மீட்டருக்கும் அதிகமான அளவில் ஆழம் உறிஞ்சக்கூடியது. பூமியில் நீர் இல்லையெனில் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி வளரும். இவைகள் உள்ள பகுதிகளில் அருகில் வேறு பயிர் செய்திருந்தால் அந்த பயிர்களுக்கு பூமியில் இருந்து கிடைக்கும் நீர் அல்லது அந்தப்பயிர்களுக்கு பாய்ச்சப்படும் நீர் என அனைத்தையும் இம்மரங்களே உறிஞ்சிவிடும்.மேலும் இம்மரங்கள் உள்ள பகுதிகளில் மழை படிப்படியாக குறையும். இதனால் இம்மரங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என விவசாயிகள், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான இடங்கள், தரிசு நிலங்கள் என கிராமப்புறங்களை சுற்றியுள்ள இடங்களிலேயே இம்மரங்கள் அதிகம் காணப்படுகிறது.

சமூக அமைப்புகள், விவசாயிகள் இந்த மரத்தின் ஆபத்தை உணர்ந்து வளர்ப்பதை தடை செய்ய வேண்டும் எனக்கூறினாலும் அரசே வளர்ப்பதால், மரங்களை அழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஏற்கனவே சீமைக்கருவேல மரங்களால் இம்மாவட்டத்தில் மழை, விவசாயம், நீர் நிலைகள், கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் யூகலிப்டஸ் மரங்களும் அதிகமான இடங்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இம்மரங்களை வளர்ப்பதால் அரசுக்கு கிடைக்கும் லாபத்தைவிட ஐந்து மடங்கு இழப்பை ஏற்படுத்தும். சீமைக்கருவேல மரத்தால் ஏற்படும் பாதிப்பை போலவே இம்மரங்களும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. தொடர்ந்து இம்மரங்கள் நட்டு வளர்ப்பதையும், ஏற்கனவே உள்ள மரங்களை வெட்டி அழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அரசே முழுமையான ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: