கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக நாய்க்கடி ஊசி போடப்பட்டது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?: உ.பி. முதல்வர் யோகிக்கு அகிலேஷ்யாதவ் சரமாரி கேள்வி..!!

லக்னோ: கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக நாய்க்கடி ஊசி போடப்பட்டது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிராக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுடன், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு அகிலேஷ் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதாகவும் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். உத்திரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியிருக்கும் நிலையில் ஹாம்லி மாவட்டத்தில் 3 பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக நாய்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்த உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரிப்பது ஏன் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் 4 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கொரோனா கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக நாய்க்கடி ஊசி போடப்பட்டது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர்களுக்கு எப்படி மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது? கொரோனா பரிசோதனை குறைவாக செய்யப்படுவது ஏன்? மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும் படுக்கைகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது ஏன்? என்று அகிலேஷ் யாதவ் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: