ஜோலார்பேட்டையில் பல வருடங்களாக கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கும் அவலம்-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை :  ஜோலார்பேட்டையில் பல வருடங்களாக கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜோலார்பேட்டை அருகே கழிவுநீர் கால்வாய் ஓரத்தில் பல குடும்பங்கள் வசித்து வருவதால் பல ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் நோய் தொற்றும் அபாயத்தில் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், பாச்சல் ஊராட்சியில், அன்னை நகர் பகுதியை ஒட்டி கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயானது பல வருடங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், அடைப்பு ஏற்பட்டு கால்வாயில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் நோய்களுக்கு ஆளாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் மழைக்காலங்களில் கால்வாயில் மழை நீர் நிரம்பி கழிவுநீருடன் கலந்த  மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் அப்பகுதி மக்கள் கடும்  அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  

மேலும், கழிவுநீர் கால்வாயானது தடுப்பு சுவர் இல்லாமல் திறந்த வெளியில் ஆபத்தான நிலையில் உள்ளது. கழிவுநீர் கால்வாயை தூர்வார பல முறை ஊராட்சி செயலாளர் பெருமாளிடம் தெரிவித்தும் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்கவும், ஆபத்தான நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாய்க்கு தடுப்பு சுவர் அமைக்கவும் சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: