அதிமுக வேட்பாளர் விருகை ரவி மீது 2 பிரிவுகளில் வழக்கு: போலீசார் நடவடிக்கை

சென்னை: தேர்தல் ஆணைய உத்தரவை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் விருகை ரவி உட்பட 50 பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ விருகை ரவி மீண்டும் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார். அதை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் விருகை ரவி உட்பட 50 பேர் தேர்தல் ஆணையம் நிர்ணயித்த நேரத்தை கடந்து இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விருகம்பாக்கம் தேர்தல் அதிகாரி சுமன் தேர்தல் ஆணைய உத்தரவை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக அதிமுக வேட்பாளர் விருகை ரவி உட்பட 50 பேர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி விருகம்பாக்கம் போலீசார் எம்எல்ஏவும், அதிமுக வேட்பாளருமான விருகை ரவி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 50 பேர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது உட்பட 2 பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: