மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் முதல்வர் கெஜ்ரிவால் ஆவேச உரை: ஜந்தர் மந்தரில் திரண்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கவுன்சிலர்களால் பரபரப்பு; குதிரைபேரம் நடத்த முடியாததால் அதிகாரத்தை குறைக்க பாஜ முயற்சி

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் டெல்லி சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி செவ்வாயன்று தாக்கல் செய்தார். இந்த சட்டத்திருத்த மசோதாவின்படி, டெல்லி அரசாங்கம் என்பது துணை நிலை ஆளுநர் தான். அமைச்சரவை எந்த முடிவை எடுத்தாலும் கவர்னருக்கு ஒப்புதலுக்காக கோப்புகள் அனுப்பப்பட வேண்டும் என்கிற சாரம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மசோதாவில், \”டெல்லி அரசு என்றால் துணை நிலை ஆளுநர்\” என்று கூறப்பட்டுள்ளது. இது நடந்தால், முதல்வர் எங்கே போவார்? தேர்தலில் பெற்ற வாக்குகளுக்கு எந்தவித அர்த்தமும் கிடையாதா? இது மக்களிடம் மோசடி செய்வதாகாதா?. அரசின் எல்லா கோப்புகளும் துணை நிலை ஆளுநரிடம் ஒப்புதல் அனுப்பி வைக்கப்படும்  நடைமுறை ஏற்கனவே இருந்தது. ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், \”டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருப்பதால் அதற்கு அதிகாரங்கள் உள்ளது. எனவே எந்தவொரு கோப்பும் எல்ஜிக்கு அனுப்பக்கூடாது என்று உத்தரவிட்டது.

ஆனால், இப்போது அனைத்து கோப்புகளையும் எல்ஜிக்கு அனுப்பும் வகையில் சட்டத்திருத்தம் செய்வதாக மசோதாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஜவினர் உச்ச நீதிமன்றத்தையோ அல்லது அரசியலமைப்பையோ நம்பவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. டெல்லியில் மத்திய அரசால் குதிரைபேரம் நடத்த முடியவில்லை. அவர்களால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க இயலவில்லை. அதனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்க மசோதாவை கொண்டு வந்துள்ளது. அதற்காக இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. மக்கள் பாஜவுக்கு வாக்களிக்க வேண்டுமெனில், அவர்கள் மக்களுக்காக முதலில் உழைக்க வேண்டும்.ஆம் ஆத்மி அரசு தனது சிறப்பான செயல்பாடுகளின் மூலம் பிற மாநிலங்களை சென்று அடைந்து வருகிறது.

இதனை பொறுக்காமல் எங்களை கட்டுப்படுத்தவே இந்த மசோதாவை பாஜ தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்மூலம் டெல்லியில் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம் என்ற பாஜ அரசு நினைக்கிறது. தேசிய தலைநகர் மண்டல சட்டத்திருத்த மசோதாவின் மூலம் டெல்லி அரசை வலுவிழக்க செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது. இச்சட்டத்தை கொண்டு மக்களை ஏமாற்ற வேண்டாம். எனவே, இந்த மசோதாவை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு பேசினார். டெல்லியில் மத்திய அரசால் குதிரைபேரம் நடத்த முடியவில்லை. அவர்களால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க இயலவில்லை. அதனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்க மசோதாவை கொண்டு வந்துள்ளது.

Related Stories: