அதிமுகவை சுழன்றடிக்கும் புது அரசியல்; அறிக்கை அக்கப்போர்: காசு கொடுத்து ஸ்கிரிப்ட் வாங்கி உதார் விடும் மாஜி: பேஜாராகும் ‘மாவட்டங்கள்’

மதுரை: அன்றாடம் அறிக்கைக்கு பெயர் போனவராக அதிமுகவின் மாஜியான உதயகுமார் இருக்கிறார். வீடியோவில் பேசியோ, நீண்ட விபரங்களுடன் அறிக்கையாகவோ இவர் ‘டெஸ்க் ஒர்க்கில்’ அன்றாடம் தரும் தகவல்கள் சமீபமாக பொதுமக்கள், அரசியல் பிரமுகர்களிடம் கடும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. சொந்த கட்சியினரே நொந்து நூலாகி, ‘அவரை நிறுத்தச் சொல்லுங்கப்பா…’ என்று ஓங்கி உரக்கக்கத்தி வருகின்றனர்.

எவரிடமும் இவரின் அறிக்கை கருத்துகள் எடுபடாத நிலையிலும், அறிக்கை விடுவதை மட்டும் விட்டு விடாமல் அறிக்கை நாயகராகவே தொடர்கிறார். வாட்ஸ்அப், மீம்ஸ்களில் வெளியாகும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டோ, பழைய காலத்தில் அதிமுக ஆட்சியில் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்றோ இவர் சமீபமாக அளந்து விடும் விஷயங்களில் வீடியோ அறிக்கைகளில் எந்தச் சாரமும் இல்லாதிருக்கிறது.

ஆளும் கட்சியை குறை சொல்லும் நோக்கத்தில் மட்டுமே அத்தனையையும் விமர்சித்து இவர் வெளியிடும் அறிவிப்புகள் பொதுமக்களிடம் அதிருப்தியை அள்ளித் தருகிறது. தனது தொகுதியிலும், தூங்கா நகரத்திலும், அன்றாட அறிக்கை தயாரிப்பிற்கென சிலரை வைத்து, மாதா மாதம் பணம் தந்து எழுதி வாங்கிக் கொண்டிருக்கிறார் இவர். இந்த அன்றாட அறிக்கை ஆளுங்கட்சியை பலவீனப்படுத்துவதற்கு பதிலாக வலிமைப்படுத்தி வருவதாக சக கட்சிக்காரர்களே பேசி வருகின்றனர்.

‘‘மொதல்ல… அவருக்கு எழுதித் தர்ற ஆளுங்களை சாத்தணும்பா…’’ என்று குமுறுகிறார்கள். ஆளும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அத்தனை துறையிலும் ஏற்படுத்தி வரும் நிலையில், அதை விமர்சித்து பழங்கதையைச் சொல்லும்போது மக்களிடம் அது முரண்பட்டு, ஆளும் அரசின் செயல்பாடுகளின் நியாயத்தை மக்களே அறிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருப்பதால், ‘அறிக்கையை நிறுத்துங்கள்.

நாளுக்கு நாள் அதிமுக மீதான மக்கள் வெறுப்பே அதிகரிக்கிறது’ என்று மூத்த நிர்வாகிகளே மாஜியான உதயகுமாரை நேரில் அறிவுறுத்தியும் அறிக்கை அரசியலை அவர் நிறுத்திய பாடில்லை. மதுரையில் அரசியல் செய்து, மற்ற இரு மாவட்டச் செயலாளர்களான செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பாவை விட, கூடுதல் செல்வாக்கை பெருக்கும் வகையில், தூங்கி எழுந்ததும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னதாக தனது அறிக்கையை கொடுத்தாகும் ஆர்வத்திலான இவர் செயல்பாடுகள் எதிர்வினையை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்கிரிப்ட் தயாரித்து தரும் குழுவினருக்கு அரசியல் அறிவு பெரிதாக இல்லாததால் புள்ளிவிபரம் துவங்கி, திட்டங்கள் வரையிலும் அத்தனையையும் தப்புத்தவறாக தருவது ஆளும் கட்சிக்காரர்களுடன், நடுநிலையான மக்களிடமும் அதிர்ச்சியுடன் கூடிய ஏளனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, இவரைப் பின்பற்றி, அதிமுக மருத்துவரணியின் டாக்டர் சரவணன், விஜயபாண்டி உள்ளிட்ட ஒரு பெரும் கூட்டமும் மதுரையில் அறிக்கை அரசியலை புதிதாக ஆரம்பித்திருக்கிறது.

‘‘மதுரை மாவட்ட அதிமுகவினரின் இந்த அறிக்கைப்போர் கட்சிக்கே சிக்கலைத் தந்து விடும், ஜெயலலிதா இருக்கும்போது அவர் வெளியிடும் அறிக்கை மட்டும்தானே வரும்; இப்போது சகட்டுமேனிக்கு ஆளாளுக்கு ஆளுங்கட்சியை எதிர்க்கிறேன் பேர்வழி என்பதாக சுயமாக அறிக்கையில் சொல்லிப்போவது, சொல்பவர்களை மட்டுமல்லாது, கட்சி மீதும் தேர்தல் காலத்தில் மக்களிடம் வெறுப்புணர்வையே அதிகரிக்கச் செய்து விடும்.

அறிக்கை விடுவதைத் தவிர்த்து, மதுரை மாவட்ட அதிமுகவினர் உருப்படியாக ஒரு செயலும் இல்லாமல் தூங்கி வழிந்து கொண்டிருக்கின்றனர்’’ என்று தென்மாவட்ட அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கே பேசி எச்சரித்திருக்கிறார்களாம்.

Related Stories: