சர்வேயில் ரொம்ப வீக்கா இருக்கு… சிட்டிங் தொகுதிகள் மட்டும் போதும்…மற்றதை பாஜ, அன்புமணிக்கு தாரை வார்க்கும் அதிமுக மாஜி

 

விழுப்புரம்: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் அந்தந்த மாவட்டத்திலுள்ள மாஜி அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கணக்கெடுப்பு நடத்தி அதற்கான வேட்பாளர்கள் தேர்வையும் நடத்தி வருகிறார்களாம். அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி என்னதான் நேர்காணல் நடத்தினாலும் மாவட்டங்களிலிருந்து இவர்கள் அனுப்பும் பெயர்கள் தான் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற வேண்டும், அப்போதுதான் ஜெயிக்க வைக்க முடியும் என்று கூறி வருகிறார்களாம்.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ரகசிய சர்வே எடுத்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் (தனி), செஞ்சி, மயிலம், வானூர் (தனி), விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 தொகுதிகள் இருக்கிறது. இதில் திண்டிவனம், வானூர் 2 தனித்தொகுதிகள் மட்டும் அதிமுக வசம் இருக்கிறது. அதேபோல் அதிமுக ஆசியோடு மயிலத்தில் வெற்றி பெற்று பாமக (அன்புமணி ஆதரவு எம்எல்ஏ) வசம் இருக்கிறது. மற்ற செஞ்சி, திருக்கோவிலூர், விழுப்புரம், விக்கிரவாண்டி 4 தொகுதிகளும் திமுக வசம் உள்ளது.

இந்நிலையில் அதிமுகவில் மாஜி அமைச்சர் கணக்கெடுப்பின்படி சிட்டிங் தொகுதிகளையும், பாமக வசம் உள்ள மயிலம் தொகுதியை பறித்து 3 தொகுதிகளில் அதிமுக போட்டியிடவும், மற்ற 4 தொகுதிகளை பாஜ, பாமக அன்புமணி அணி, புதுசா வரும் கட்சி என கூட்டணி வசம் தள்ளிவிட அதிமுக மாஜி அமைச்சர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்கட்சி வட்டாரத்தினர் கூறுகையில், அதிமுகவில் சரியான கூட்டணி இன்னும் அமையாத நிலையில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டும் தேர்வு செய்து அதில் போட்டியிட அதிமுக முடிவு செய்துள்ளது. அதன்படி திண்டிவனம், வானூர் தனித்தொகுதிகளில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் கூட்டணியில் போட்டியிட்டு எங்கள் உழைப்பில் மயிலம் தொகுதியில் பாமக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இந்த முறை நேரடியாக போட்டியிட அதிமுகவில் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார்.

திமுக வசம் உள்ள மற்ற 4 தொகுதிகளும் அவர்களின் கோட்டையாக இருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிட கட்சி தலைமை முயற்சித்து வருகிறது. அதன்படி திருக்கோவிலூர் தொகுதியில் கடந்த முறை கூட்டணியில் பாஜ போட்டியிட்டது. தற்போது மீண்டும் அதிமுக கூட்டணியில் போட்டியிட பாஜவில் முன்னாள் எம்எல்ஏக்கள் சம்பத், கலிவரதன் ஆகியோர் முயற்சித்து வருகின்றனர்.

இபிஎஸ்சிடம், பாஜ தலைமை அளித்த பட்டியலில் இந்த தொகுதியும் இருக்கிறது. அதேபோல் செஞ்சி தொகுதியில் அதிமுகவிலிருந்து பாஜவில் இணைந்த முரளி (எ) ரகுராமனும் பாஜ சார்பில் போட்டியிட இரு கட்சியிலும் வற்புறுத்தி வருகிறார். மேலும், அன்புமணி அணியில் செஞ்சி தொகுதியில் ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்த கணேஷ்குமாரும் கூட்டணியில் மீண்டும் போட்டியிட முயற்சித்து வருகிறார்.

இதனால் யாராவது ஒருவருக்கு இந்த தொகுதியை கழற்றி விட அதிமுக முடிவெடுத்துள்ளதாம். அதேபோல், மயிலத்தை அதிமுகவிடம் ஒப்படைத்த அந்த தொகுதி சிட்டிங் பாமக எம்எல்ஏ சிவக்குமார் மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். எனவே, இந்த தொகுதியையும் அன்புமணி அணிக்கு விட்டு கொடுக்கவும் அதிமுக ஒப்புக்கொண்டிருக்கிறதாம்.

அதேபோல் மாவட்ட தலைநகரான விழுப்புரமும் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகி, மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்தையே தொகுதி மாறவிட்டதால் இந்த தொகுதியையும் கூட்டணிக்கு கழற்றி விடும் முடிவில் அதிமுக இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் பாஜ தலைமை உத்தரவில் புதுசா இணைய உள்ள ஒரு கட்சிக்கு இந்த தொகுதியை தாரைவார்க்கவும் அதிமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ெமாத்தத்தில் சிட்டிங் எம்எல்ஏ தொகுதிகளை மட்டும் தக்கவைத்து மற்ற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கழற்றி விட்டு சி.வி.சண்முகம் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: