பாமக யாருடன் கூட்டணி? ஜன.16 அல்லது 17ல் அறிவிப்பு

 

திண்டிவனம்: பாமக யாருடன் கூட்டணி என்பதை நாளை அல்லது நாளை மறுநாள் ராமதாஸ் அறிவிப்பார் என்று ஜி.கே.மணி தெரிவித்து உள்ளார். சென்னையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததா? என்ற கேள்விக்கு ராமதாஸ் பதிலளித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பொங்கல் விழா நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், மனைவி சரஸ்வதி, மகள் ஸ்ரீகாந்தி, கவுரவ தலைவர் ஜி.கே மணி, அருள் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இவ்விழாவில் பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற உறியடி நிகழ்வில் ராமதாஸ், முகுந்தன், கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். இதில் முகுந்தன் உறியடித்து பானையை உடைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ‘அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் அறிவிக்கப்படும். நான் சென்னைக்கு கூட்டணி குறித்து பேச செல்லவில்லை’ என்றார்.

பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், ‘தைப் பிறந்தால் வழி பிறக்கும். விருப்ப மனு வாங்குறது நேற்றுடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு நாளையோ (16ம் தேதி) அல்லது நாளை மறுநாளோ (17ம் தேதி) கட்டாயம் கூட்டணி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது. இந்த தேர்தலை பொறுத்தவரைக்கும் பல்வேறு கோணங்களில் பல்வேறு விதமாக பேசிட்டு இருந்தாலும்கூட, எந்த கட்சி யாரோடு கூட்டணி சேருவாங்கன்னு இன்னும் இறுதி முடிவு அறிவிக்கவில்லை.

எந்த கட்சிகளுமே இன்னும் அறிவிக்கவில்லை, சரியான நேரத்துல எல்லாக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும். பாமக எங்கே கூட்டணி என்பதை ராமதாஸ் பேசி ஒருநல்ல முடிவை அறிவிப்பார். ராமதாஸ் அமைக்கிற கூட்டணிதான் வெற்றி கூட்டணி. அந்த கூட்டணிதான் ஆட்சியில் அமரும்’ என்றார்.

Related Stories: